எதிர்வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு இலங்கை அணியில் இளம் வேகப்பந்து சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்க மற்றும் அதிரடித் துடுப்பாட்ட வீரர் பானுக்க ராஜபக்ஷவை அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
இந்த வாரம் இலங்கை வரும் மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு எதிராக மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.
இதற்கான இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை குழாத்தை தேர்வு செய்ய தேர்வுக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது.
இதில் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க தமது இடத்தை இழக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஷானக்க கடைசியாக ஆடிய தனது மூன்று இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனதோடு அது தொடக்கம் அவர் அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கும் வகையில் உள்ளூர் போட்டிகளிலும் சோபிக்கத் தவறியுள்ளார்.
இந்நிலையில் ஷானக்கவின் இடத்தில் 22 வயது சமிந்து விக்ரமசிங்கவை அணியில் ஆடச் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமிந்து கடைசியாக கடந்த ஜூலையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டியில் ஆடி இருந்தார். அந்தப் போட்டியில் அவர் 4 ஓவர்களுக்கும் 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் சோபித்த நிலையிலேயே சமிந்துவுக்கு இலங்கை அணியில் வாய்ப்புக் கிட்டியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ஒன்றரை ஆண்டு இடைவேளைக்குப் பின்னர் பானுக்க ராஜபக்ஷ அழைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைக் குழாத்தில் தசுன் ஷானக்க நீக்கப்படும் இடத்திற்கே பானுக்க இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பானுக்க ராஜபக்ஷ கடைசியாக 2023 ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஆடி இருந்தார். அது தொடக்கம் இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்காத அவர் அண்மைக் காலத்தில் டி20 லீக் போட்டிகளில் சோபித்து வருகிறார்.
இதேவேளை இரு வீரர்களின் உடல் தகுதி தொடர்பில் சந்தேகம் நிலவுவதன் காரணமாகவே 18 பேர் கொண்ட குழாத்தைத் தேர்வு செய்ய தேர்வுக் குழுவினர் எதிர்பார்த்துள்ளனர். இதில் வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷ பதிரண மற்றும் நுவன் துஷார ஆகியோர் தமது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற தேசிய சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதீஷ பதிரண மற்றும் நுவன் துஷார இருவரும் ஆடி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில் இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறும் பயிற்சிப் போட்டியிலும் பங்கேற்று தமது உடல் தகுதியை நிரூபிக்கவுள்ளனர்.
பத்திரண தோள்பட்டை காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததோடு துஷார இந்தியத் தொடரின்போது கட்டை விரல் காயத்திற்கு உள்ளாகி இருந்தார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இதன் இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகள் ஒக்டோபர் 15 மற்றும் 17 ஆம் திகதிகளில் அதே தம்புள்ளையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரு அணிகளும் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளும் ஒக்டோபர் 20, 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் பல்லேகலவில் நடைபெறவுள்ளன.