Monday, November 4, 2024
Home » மத்திய கிழக்கை பிரித்தாளும் மறைமுக முயற்சியில் மேற்குலகு

மத்திய கிழக்கை பிரித்தாளும் மறைமுக முயற்சியில் மேற்குலகு

அரபு நாடுகளை மோதவிடும் தந்திரமா?

by gayan
October 5, 2024 6:00 am 0 comment

“ஈரானிலோ மத்திய கிழக்கிலோ இஸ்ரேலின் கைகள் எட்டாத இடங்களில்லை. நாங்கள் நினைத்தால் எந்தப் பிரதேசத்தை வேண்டுமானாலும் இலக்குகள் வைத்து தாக்குதல்களை மேற்கொள்வோம். இது எவ்வளவு உண்மை என்பதனை தற்போது நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள்.”

-நெதன்யாகு-

“எங்களுக்கு எந்த இடமும் வெகு தொலைவில் இல்லை. நான் எதிரிகளை துரத்துவேன். அவர்களை அழிக்காமல் நான் திரும்ப மாட்டேன்.”

-இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

இந்தச் செய்திகள் எத்தனை உண்மையானது என்பதை மத்திய கிழக்கு நாடுகளும் ஏன் உலகம் கூட கண்டுகொள்ள வேண்டிய முக்கிய தருணத்தில் இருக்கிறது.

தனது நேச நாடுகளென மத்திய கிழக்கு நாடுகளுக்குள் (அரபு நாடுகளுக்குள்) நண்பனாக ஊடுருவிய மேற்குலகு (குறிப்பாக அமேரிக்கா) தனது விமானத் தளங்களையும் படைவீரர்களையும் அங்கு குவித்து வைத்திருப்பதன் வினைகளை இன்று சில முஸ்லிம் நாடுகளும் நாளை ஒட்டுமொத்த அரபுலகும் அனுபவிக்க எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று கூறினாலும் அது மிகையாகாது.

தன் செல்லப் பிள்ளை இஸ்ரேல் குண்டுகளை வைத்து தனது பக்கத்து நாடுகளை மக்களை துரத்தி விளையாடுவதையும் கையில் வைத்து நசுக்கி தலை காலென பிய்த்து நெருப்பில் இட்டு மகிழ்வையும் எதிர்க்கும் போதெல்லாம் இஸ்ரேலின் போதிய பாதுகாப்பிற்காக போர்விமானங்களைத் தனது தளங்களில் நிறுத்தியும் தாக்கியும் மற்றும் செங்கடல் மத்திய தரைக்கடல் பகுதிகளில் போர்க் கப்பல்களை கொண்டு வந்தும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை அது தடுக்கிறது.

இன்னும் அமெரிக்கா அடுத்த நாடுகள் தாங்கள் இறைமையை மீறியதாக குற்றம் சுமத்தினால் உலக எதிர்ப்பில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அது தற்காப்பு நிமித்தம் தாக்குவதாக இரும்பு அரண் போல நின்றும் காப்பாற்றுகிறது .

இங்கு நெதன்யாகுவின் உரைப்பகுதி எமக்கு விபரித்து வைக்கும் செய்தியும் இதே.

அமெரிக்காவும் மேற்குலகும் அவர்களுக்கு ஆதரவாளர்களாக இருக்கும் போது யாரையும் எந்த நாட்டையும் பயமின்றி தாக்கும் வல்லமை தாங்களுக்கு உண்டு என்பதை மிக உறுதியாக கூறுகின்றார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

உலகில் 157 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இஸ்லாமிய மதத்துக்குள் உள்ள ஷியா- சுன்னி பிரச்சினையை மத்திய கிழக்கில் மிகப்பாரதூரமானதும் பயங்கரமானதாகவும் ஆக்கி அவர்களுக்குள் மோதவிட்டு போருக்கான உதவி மற்றும் சமாதானத் தளமொன்றை கட்டியெழுப்பும் பிரித்தாளுகையின் சூழ்ச்சியாளனாகவே மத்திய கிழக்கின் நண்பனாக காவலனாக அமேரிக்கா உள்நுழைந்தது.

இன்று முஸ்லிம்களை அழிக்க இஸ்ரேலுக்கான அமேரிக்காவின் உதவி மிகப் பெரியது. பல பில்லியன்கணக்கில் ஆயுதங்கள் அள்ளி வழங்கி திட்டங்களையும் மிகக் கச்சிதமாகபோட்டு வழிநடத்திக் கொடுக்கின்றது அமெரிக்கா.

அதன் துணையின்றி இஸ்ரேலால் ஒருநாளும் இன்று நடக்கும் பெரிய தாக்குதல்களை தனியாக செய்து முடிக்க முடியாது என்பது பேருண்மையாகும்.

அவ்வாறு இருக்க பலஸ்தீனம், லெபனான், எமனென மத்திய கிழக்கை பற்றியெரியவைக்கும் இஸ்ரேலின் அனைத்துமாக தோழனாக மேற்குலகு இருக்கிறது என்பதை நெதன்யாகுவின் உரையின் இந்தப் பகுதி தெளிவுபடுத்துகின்றது.

இது எவ்வளவு உண்மைகளின் செறிவு மற்றும் யதார்த்தம் என்பதை ஏன் புரியாமல் இன்னும் இந்த மத்திய கிழக்கு நாடுகளும் அரபு உலகும் இயங்குகிறது என்பதைத்தான் இதுவரை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

இவர்கள் அமெரிக்காவின் (மேற்குலகின்) அடிமைகளாகி போய்விடுவார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

முஜாமலா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x