யெமனின் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக நேற்று (03) அறிவித்தனர். எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
‘பல எண்ணிக்கையான ஆளில்லா விமானங்கள் மூலம் ஆக்கிரமிப்பு பலஸ்தீன பகுதியான ஜப்பாவில் (டெல் அவிவ்) முக்கிய இலக்கு ஒன்றின் மீது இராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது’ என்று ஹூத்திக்கள் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘எதிரியால் அதனை சுட்டு வீழ்த்துவதற்கு முடியாது அந்த ஆளில்லா விமானங்கள் தனது இலக்கை அடைந்த நிலையில் இந்த நடவடிக்கை வெற்றி தந்தது’ என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மத்திய இஸ்ரேலுக்கு மேலால் சந்தேகத்திற்கு இடமான வான் இலக்குகள் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டதோடு அது பற்றி மேலதிக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
யெமனின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்துவதாக கூறி வருகின்றனர்.