Monday, November 4, 2024
Home » மகிழ்ச்சி என்பது கடவுளிடமிருந்து வரும் பரிசு

மகிழ்ச்சி என்பது கடவுளிடமிருந்து வரும் பரிசு

by Gayan Abeykoon
October 1, 2024 3:00 am 0 comment

ெல்ஜியத்தின் கோகெல்பர்க் திருஇருதய பேராலயத்தில் அந்நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார்,  திருத்தொண்டர்கள், மேய்ப்புப்பணியாளர்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் உரை செப்டம்பர் 28 சனிக்கிழமை காலை  பெல்ஜியத்தின் கோகெல்பர்க் திருஇருதய பேராலயத்தில் நற்செய்தி, மகிழ்ச்சி, இரக்கம் எனும் மூன்று தலைப்பில் அவர் உரையாற்றினார்.நாம் வாழ்கின்ற காலமும், மேற்கத்திய பகுதிகளில் நாம் காணும், நம்பிக்கை கொள்வதில் உள்ள நெருக்கடியும், நம்மை நமது அடிப்படை வாழ்வான நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு திரும்ப அழைத்துச் செல்கின்றன. இயேசு இவ்வுலகிற்குக் கொண்டு வந்த நற்செய்தியின் அழகை பிரதிபலிக்கும்படிச் செய்கின்றன.

ஆபிரகாம், மோசே, மற்றும் இறைவாக்கினர்கள் தங்களது அழைப்பிற்கு முன் அனுபவித்த நெருக்கடி போன்று, நாம் சந்திக்கும் ஒவ்வொரு நெருக்கடியும் நம்மை உலுக்கி மாற்றத்தை நம்மில் ஏற்படுத்துகின்றன. ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பான இது திருவிவிலியத்தில் கைரோஸ் என்று அழைக்கப்படுகிறது.

பாவ இயல்பு என்னும் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆவியின் பாதைகளைக் கண்டுபிடிப்பது நற்செய்திப்பணியாற்றும் நமக்குக் கொடுக்கப்பட்ட கடமை. தனித்து இயங்கும் நிலையிலிருந்து ஒன்றிணைந்த திருஅவையாக, பிறரை வரவேற்கும் திருஅவையாக, நாம் மாற வேண்டும். திருஅவையின் இத்தகைய மாற்றத்திற்கு ஒரு துணிவு தேவை. அருள்பணியாளர்கள், துறவறத்தார் என அனைவரும் துணிவுடன் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும்.

அனைவரும் ஒன்றாக செல்கின்றோம் ஆனால் வேறு பாதைகளில் செல்கின்றோம். என்று யான்கா என்னும் மேய்ப்புப்பணியாளர் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். நம்மிடமிருந்து வேறுபட்டவர்களைச் சந்திக்க இறைவன் நம் இதயத்தைத் திறக்கிறார். திருஅவையில் அனைவருக்கும் இடம் உள்ளது, யாரும் மற்றொன்றின் புகைப்பட நகலாக இருக்கக்கூடாது. திருஅவையில் ஒற்றுமை என்பது வேற்றுமையில் நல்லிணக்கத்தைக் கண்டறிவது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மகிழ்ச்சி என்பது கடவுளிடமிருந்து வரும் பரிசு. நற்செய்தியால் தூண்டப்பட்ட இதயத்தின் மகிழ்ச்சி. இருண்ட துன்பமான நேரங்களில் கூட வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் மகிழ்ச்சியே உண்மையான மகிழ்ச்சியாகும். இந்த மகிழ்வின் பாதையில் வறுமை, பாவம், துன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும், கடவுள் நம் அருகில் இருக்கிறார், நம்மைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை அறிவது மிக முக்கியம்.

திருத்தந்தை ஜோசப் ராட்ஸிங்கர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு இவ்வாறு எழுதினார், “எங்கே மகிழ்ச்சி குறைகிறதோ, அங்கு நகைச்சுவை இறக்கும், அங்கே தூய ஆவி இருப்பதில்லை. ஏனெனில் மகிழ்ச்சி என்பது அருளின் அடையாளம்”.

எமது நற்செய்தி அறிவிப்புப்பணி, கொண்டாட்டங்கள், மேய்ப்புப்பணி ஆகியவை எப்போதும் இதயத்தின் மகிழ்ச்சியைப் பிரகாசிக்கட்டும். ஏனெனில் நமது மகிழ்ச்சியானது தொலைவில் உள்ளவர்களைக் கூட ஈர்க்கிறது. மகிழ்ச்சியே நமது வாழ்வின் வழி என்பதை உணர வேண்டும். நம்பகத்தன்மை கடினமாகத் தோன்றும்போது கூட மகிழ்ச்சிக்கான பாதை எது என்பதைக் கண்டறிந்து நாம் முன்னேறிச்செல்ல வேண்டும்.

ஏற்கப்பட்டதும், பகிரப்பட்டதும், பெறப்பட்டதும், கொடையாகக் கொடுக்கப்பட்டதுமான நற்செய்தியானது மகிழ்ச்சியின் வழியில் நம்மை வழிநடத்தி, இரக்கம் நிறைந்த தந்தையைக் கண்டறிய உதவுகின்றது. கடவுளின் இரக்கமானது  நமது வீழ்ச்சியிலிருந்து நம்மை உயர்த்துகின்றது. நம்மீது  அளவற்ற அன்பை காட்டுகின்றது. இறைத்தந்தை இரக்கமுள்ளவர் என்பதை எடுத்துரைக்கின்றது.

கடவுள் இரக்கத்தின் தந்தை என்பதைக் கண்டறிய வைக்கிறது. கடவுளின் நீதி மேன்மையானது நாம் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள், தவறு செய்தவர்கள் அனைவரும் தங்கள் தவறுகளை சரிசெய்ய இறைவனின் இரக்கத்தால் அழைக்கப்படுகிறார்கள்.

கடவுளின் இரக்கமுள்ள அன்பு அவர்களின் இதயங்கள் குணமடைய தேவை. கடவுள் அவருடைய இரக்கத்தினால்தான் நம்மை நீதிமான்களாக்குகிறார், அவர் நமக்கு ஒரு புதிய இதயத்தை, ஒரு புதிய வாழ்க்கையைத் தருகிறார். என்பதை உணர்ந்து மகிழ்வுடன் வாழ வேண்டும்.

சிறைக்கைதிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை ஒரு மருந்தாக இருக்க வேண்டும், அவர்கள் குணமடைய அது வழிவகுக்க வேண்டும். மக்கள் மீண்டும் எழுந்து வாழ்விலும் சமூகத்திலும் தங்கள் வழியைக் கண்டறிய உதவ வேண்டும். அவர்களுக்கான பணியில் எப்போதும் இரக்கத்துடன் செயல்படுவோம்.

மெரினா ராஜ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x