சீனா மீதான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்து சமுத்திரத்தில் இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக ஒத்துழைப்புடன் செயற்படப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை பிரதிச் செயலர் கர்ட் எம். கேம்ப்பெல் குறிப்பிடுகையில், “நாங்கள் இதை இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் இதை நான் உங்களுக்கு முதல் முறையாக வெளிப்படுத்துகிறேன்.அமெரிக்காவும் இந்தியாவும் மற்றும் ஏனைய நாடுகளும் இந்து சமுத்திரத்தை மையமாக வைத்து ஒரு அமர்வை நடத்த உத்தேசித்துள்ளன. எங்கள் பரஸ்பர கவலைகள் என்ன, எப்படி ஒன்றாக வேலை செய்யலாம் என்பதைப் பற்றி பேசப் போகிறோம் ” என்றார்.
குடியரசுக் கட்சி வெளியுறவுக் குழுவில் அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். பைடன் நிர்வாக உயர்மட்ட அதிகாரியான அவர் மேலும் குறிப்பிடுகையில் “இது புதிய எல்லை, இந்து சமுத்திரத்தில் இந்தியா போன்ற ஒரு பங்காளியுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்ற இருக்கிறோம்” என்று சுட்டிக்காட்டினார்.
இந்து சமுத்திரத்தில் உலகளாவிய வர்த்தகத்திற்கான மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றாகும், நாளாந்தம் பெருந்தொகையான கப்பல் போக்குவரத்துகள் இடம்பெறுகின்றன.
மதிப்பீடுகளின்படி, உலகின் 60 சதவீத கடல்சார் வர்த்தகம் இந்து சமுத்திரத்தின் வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது, இதில் உலகின் மூன்றில் ஒரு பங்கு கொள்கலன் சரக்குகளும், உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கும் அடங்கும். ஒரு நாளைக்கு சுமார் 36 மில்லியன் பீப்பாய்கள் இந்த வழியாக நகர்கின்றன. இது உலகின் எண்ணெய் விநியோகத்தில் 40% மற்றும் எண்ணெய் வர்த்தகத்தில் 64% ஆகும்.
சீனா தனது வர்த்தகம், குறிப்பாக எண்ணெய் வர்த்தகம் ஆபத்தில் இருப்பதால், பிராந்தியத்தில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது. இது 2017 இல் செயல்படத் தொடங்கிய ஜிபூட்டியில் ஒரு இராணுவத் தளத்தைக் கொண்டுள்ளது. குவாடார் முதல் சிட்டகாங் வரை, இது தனது செயற்பாடுகளை அதிகரித்துள்ளது. அடுத்த 2-4 ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தில் நிரந்தர விமானம் தாங்கி கப்பலை சீனா வைத்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கவலைக்குரிய மற்றொரு பகுதி செங்கடல் பகுதி ஆகும்.கடந்த ஆண்டு ஹவுதிகள் வணிக கப்பல்கள் உட்பட கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியதன் மூலம் அதிகரித்த ஏற்ற இறக்கத்தைக் கண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், கிரீஸ், ஜப்பான், லைபீரியா மற்றும் மார்ஷல் தீவுகள் போன்ற நாடுகளின் கப்பல்கள் ஹூதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, அப்பகுதியின் ஊடான கடல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளன.
ஹூதிகள் எந்த சீனக் கொடியுடைய கப்பல்களையும் குறிவைக்கவில்லை. அவை தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. என்றாலும், ஒரு கொந்தளிப்பான செங்கடல் சூழ்நிலை தாய்வான் மீதான அதன் நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப பீஜிங்கிற்கு உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மூலோபாய விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் கிரிஷ் லிங்கண்ணா இது தொடர்பில் குறிப்பிடுகையில், செங்கடலின் நிலைமை “தாய்வானில் இருந்து சர்வதேச கவனத்தை மாற்றுகிறது.அங்கு பீஜிங்கின் உறுதியான நகர்வுகள் சாத்தியமான இராணுவ மோதலின் அச்சத்தை எழுப்பியுள்ளன.” என்று தெரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்பு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கடற்படை உளவுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் கொமடோர் ரஞ்சித் ராய் (ஓய்வு) குறிப்பிடுகையில் “ஒரு சீன வணிகக் கப்பல் மீது எந்த தாக்குதலையும் நான் காணவில்லை.மேலும் இந்த பகுதி கொந்தளிப்பாக இருக்கலாம், இது தாய்வானிய நெருக்கடியிலிருந்து கவனத்தை திசை திருப்புகிறது” என்று தெரிவித்தார்.