கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலை, உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசியுடன் இவர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆளுநரின் செயலாளர் பி. மதனநாயக்க, கிழக்கு மாகாண சபை பதில் செயலாளர் ஏ. எஸ்.எம். பாயிஸ், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்தநாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைப்பின் செயலாளர் ஜி. எச். என்.திசநாயக்கா, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியாக தலைவர் பி. மதன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் நிறைவேற்று குழு உறுப்பினருமான சட்டத்தரணி அருண் ஹேமச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடமையை பொறுப்பேற்ற பின், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ என்ற ஜனாதிபதியின் புதிய அரசியல் கலாசார
சிந்தனைக்கேற்ப, கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து, அழகான மாகாணம் ஒன்றை உருவாக்குவதே எனது பணியாகும்.
எனது அதிகாரத்தை, தனிப்பட்ட நலனுக்கு அன்றி, சமூகத்தின் நலனுக்காகவே பயன்படுத்துவேன். என் மீது ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, நாட்டின் புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்கொண்டு செல்லும் என எதிர்பார்க்கிறேன்.
எனது ஆரம்ப கல்வியை கந்தளாய் பிரதேசத்திலே தொடங்கினேன். இதன் காரணமாக, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களை எனக்கு நன்கு தெரியும். தமிழ் மொழி பேசுபவர்களோடு, தமிழ் மொழியிலேயே உரையாடி, அவர்களது தேவைகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தார்.
ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார்.
பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மனைவியின் பெயர் மல்லிகா ரத்னசேகர. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.
இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.
தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) கற்றார். அத்துடன் ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1988 இல் வேதியியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
1996 ஓகஸ்ட் மாதம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக சேர்ந்து 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். மற்றும் 1999 முதல் 2005 வரை பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உபவேந்தராகவும் பணியாற்றினார்
2017 ஜனவரியில் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உள்ளன. ரத்னசேகர பல பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் ஒரு பயிற்சியாளராகவும், வளவாளராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்பட்டவர்.
குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி. எஸ் ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க ,மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏ.எச். ஹஸ்பர், சீனக்குடா நிருபர் கியாஸ்