– புதிய ஜனாதிபதிக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் தெரிவிப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமைத்துவமானது, இலங்கையின் ஸ்திரத்தன்மையான, வளமான, பாதுகாப்பான அனைவரையும் உள்ளீர்க்கப்பட்ட வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் என தாம் நம்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா (Kristalina Georgieva), புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் IMF வேலைத்திட்டம் உள்ளிட்ட இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு இலக்குகளை அடைவதற்கு நிலைபேறான பங்காளியாகவும் பங்குதாரராகவும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளில் இருந்து, இலங்கையை மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்ல உதவிய கடின வெற்றிகளை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதற்கு அநுர குமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.