ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்கிறார் கிறிஸ்து.
அப்பா சாகக் கிடக்கிறார்; மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார். மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய பிள்ளைகள் அவருடைய சொத்துக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இன்றைய சமூகத்தில் இயல்பாக நடக்கின்ற விடயம்.
இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாகத் தமது பாடுகளை முன்னறிவிக்கிறார். ஆனால் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.
முதலிடத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த தம் சீடர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்கிறார் கிறிஸ்து (மாற் 9:35).
பெரியவர்களையும் சிறியவர்களையும் வேறுபடுத்திக் காட்டும் பண்பு பணிவுடமையாகும், பெரியவர்கள் என்றும் பணிவுடன் வாழ்வர்; சிறியவர் என்றும் செருக்குடன் வாழ்வர்.
பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து -குறள் 978
கடவுளுடைய எண்ணங்களும் வழிமுறைகளும் மனிதருடைய எண்ணங்களிலிருந்தும் வழிமுறைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை (எசா 55:8-9).
மனிதனின் வழி ஆணவத்தின் வழி; கடவுளுடைய வழியோ தாழ்ச்சியின் வழி. முதல் பெற்றோரின் பாவம் ஆணவம், அவர்கள் மனிதர்களாக இருந்தும் கடவுளுடைய நிலையைத் தட்டிப்பறிக்க விரும்பினர். எனவேதான் விலக்கப்பட்ட. கனியை உண்டு, பாவத்தையும் சாவையும் இவ்வுலகில் புகுத்தினர்,
அவர்களின் ஆணவ வழிக்கு மாற்று வழியாகக் கிறிஸ்து தாழ்ச்சியின் வழியைப் பின்பற்றினர். அவர் கடவுள் நிலையிலிருந்தும் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்தார் (பிலி 2:6-8).
பாவமே அறியாத அவர் உலகின் பாவ மூட்டைகளை எல்லாம் சுமந்து கொண்டு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெறச் சென்றார். அதைக் கண்ட திருமுழுக்கு யோவான் அதிர்ச்சி அடைந்தார்.
இறுதி இராவுணவின் போது இயேசு சீடர்களுடைய காலடிகளைக் கழுவினார். அதைக் கண்டு பேதுரு அதிர்ச்சி அடைந்தார், நமது ஆணவத்திற்குத் தேவையான அதிர்ச்சி வைத்தியத்தை அவர் அளித்தார்.
நாம் பெரியவர்களாக அல்ல, குழந்தைகளாக மாறவேண்டும்; இல்லையென்றால், விண்ணரசில் நுழைய முடியாது என்றும், ஒரு குழந்தையைப் போலத் தன்னைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் பெரியவர் என்ற புரட்சிகரமான போதனையையும் வழங்கினார் (மத் 18:3-4),
“நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்” (மத் 11:29) என்று தம்முடைய தனிப்பட்ட பண்பைக் தொட்டுக் காட்டினார்.
இன்றைய குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஒருவர் மற்றவரை அடக்கி ஆள விரும்புகின்றனர். இதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அடக்குமுறை மனிதத் தன்மை கொண்டது அல்ல, அது மிருகத் தன்மை வாய்த்தது.
காட்டிலே கொடிய விலங்குகள் சாதுவான விலங்குகளை வேட்டையாடுகின்றன. மனிதன் என்பவன் பிறரை அடக்கி ஆளாமல் பிறருக்கு விட்டுக் கொடுக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்த வேண்டும் (கலா 5:15),
பிறரை அடக்கி ஆளும் முறை பிற இனத்தாரின் முறை என்றும், இயேசுவின் சீடர்கள் பிறரை அடக்கி ஆனாமல் பிறருக்குத் தொண்டு ஆற்ற வேண்டும் (மத் 20:25-28) என்றும் போதிக்கிறார் கிறிஸ்து.
கடந்த ஞாயிறு இரண்டாம் வாசகத்தில் புனித யாக்கோபு விண்ணக ஞானத்தையும் மண்ணக ஞானத்தையும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் (யாக் 3:13-18), மண்ணக ஞானம் பேய்த்தன்மை கொண்டது: அது பொறாமை, மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை ஆகிய தீய பண்புகளைக் கொண்டது. ஆனால் கடவுளிடமிருந்து வரும் விண்ணக ஞானம் தெய்வத் தன்மையுடையது. அது அமைதி, பொறுமை, இணங்கிப் போகும் தன்மை ஆகிய நற்பண்புகளைக் கொண்டது. கடவுள் தன்மை கொண்டவர்கள் பிறருடன் இணங்கிப் போவர்.
பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிகமாக வெற்றி அடைந்தாலும் நிரந்தரத் தோல்வியைத் தழுவுவர், மாறாக, பணிந்து போகிறவர்கள் தற்காலிகமாகத் தோல்வி அடைந்தாலும் நிரந்தரமான வெற்றியை அடைவர் என்று அன்றைய முதல் வாசகமும், பதிலுரைத் திருப்பாவும் சுட்டிக் காட்டுகின்றன.
நீதிமானின் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள் இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர்காலம் இல்லை என்று ஏளனம் செய்கின்றனர். ஆனால் கடவுள் நீதிமான்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.
“செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுந்து என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர். கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கிறார்” (திபா 54:3-4), தீமைக்குத் தீமை செய்பவர்களுக்கு கிடைப்பது ஒருநாள் இன்பம். தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர இன்பம்.
அருட்பணி வை.இருதயராஜ்