பங்களாதேஷில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெடித்த கடந்த ஓகஸ்ட் 4 தொடக்கம் 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக குறைந்தது 2,010 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக பங்களாதேஷ் மதங்களுக்கு இடையிலான இந்து பௌத்த கிறிஸ்தவ ஒய்கியா பரிஷாத் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வன்முறைகளில் குறைந்தது ஒன்பது சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருப்பதோடு நான்கு சிறுபான்மையின பெண்கள் கற்பழிக்கப்பட்டிருப்பதாக பரிஷாத் அமைப்பு டாக்காவில் நேற்று முன்தினம் (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள தமது உள்ளூர் பிரதிநிதிகள் மூலம் தரவுகளைச் சேகரித்ததாக பரிஷாத் அமைப்பின் மூன்று தலைவர்களில் ஒருவரான நிர்மால் ரொசாரியோ தெரிவித்தார். இந்தத் தரவுகள் ஆறு உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
‘எமது அறிக்கையில் எந்த ஒரு அரசியல் வன்முறையையும் நாம் உட்படுத்தவில்லை. சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை மாத்திரமே நாம் எமது அறிக்கையில் சேர்த்திருக்கிறோம்’ என்று நிர்மால் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் அரசியல் தொடர்புபற்றி கேள்வி எழுப்பியபோதே இந்த விளக்கத்தை அவர் அளித்திருந்தார்.
பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹமது யூனிஸ், பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் சமூக விடயத்திற்கு அப்பால் அரசியல் பின்னணி கொண்டது என்று செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பரிஷாத் அறிக்கையின்படி, 68 மாவட்டங்கள் மற்றும் பெருநகர் பகுதிகளில் 1,705 குடும்பங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 157 வீடுகள் சூறையாடப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு மற்றும் தீ வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட முப்பத்து நான்கு குடும்பங்கள் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்தத் தாக்குதல்களில் சிலரது காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. ‘இந்தக் குடும்பங்கள் தற்போதும் பரிதாபகரமான வாழ்க்கை ஒன்றை வாழ்கின்றனர்’ என்று நிர்மால் தெரிவித்தார்.
இதில் குல்கா பிரிவில் அதிகபட்சமாக 810 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. நான்கு கற்பழிப்புச் சம்பவங்களும் இங்கேயே இடம்பெற்றள்ளன. கற்பழிப்புக்கு உள்ளான பெண் ஒருவர் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். குறைந்தது 69 வழிபாட்டுத் தலங்கள், 915 வீடுகள் மற்றும் 953 வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு அல்லது சூறையாடப்பட்டுள்ளன. மேலும் 21 வர்த்தக நிறுவனங்கள் பறிக்கப்பட்டிருப்பதோடு 38 பேர் உடல் ரீதியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50,000 மக்களின் உடைமைகள் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டிருப்பதோடு இந்தச் சமூகங்களைச் சேர்ந்த 2 கோடி மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் என்று நிர்மால் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையின் கீழ் இந்த சம்பவங்கள் குறித்து சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும்படியும் குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கும்படியும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் பரிஷாத் அமைப்பு இன்று (21) நாடு முழுவதும் தமது கோரிக்கைகளை முன்வைத்து பேரணிகளை நடத்தவுள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பரிஷாத் அமைப்பு எட்டு அம்ச கோரிக்கைகளையும் விடுத்தது.
இதில் சிறுபான்மையினரை பாதுகாக்கும் சட்டம் ஒன்றை செயற்படுத்தல், தேசிய சிறுபான்மை சமூகம் ஒன்றை அமைத்தல் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சு ஒன்றை நிறுவுதல் ஆகிய கோரிக்கைகளும் அடங்கும்.
அதேபோன்று அரசிலும் பாராளுமன்றத்திலும் சிறுபான்மையினரின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை அந்த அமைப்பு கோரியது.
துர்கா பூஜையின்போது இந்துக்களுக்கு மூன்று நாள் விடுமுறையும் பௌத்த முழு நோன்மதி தினம் மற்றும் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் விடுமுறை அளிக்கவும் பரிஷாத் அமைப்பு கோரிக்கை விடுத்தது.