தெற்காசியாவின் மிக சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) மற்றும் புலமைச் சொத்துரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சட்ட நிறுவனங்களில் ஒன்றான சுதத் பெரேரா அசோசியேட்ஸ் ஆகியன இணைந்து, நாட்டில் அதிகரித்து வரும் போலியான உதிரிப் பாகங்களின் சந்தை தொடர்பில், CMTA உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்றை அண்மையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் முன்னெடுத்திருந்தது.
இந்த நிகழ்வின்போது, CMTA உறுப்பினர்களுக்கு பெறுமதி வாய்ந்த தகவல்களையும், போலித் தயாரிப்புகளின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கத்தையும் சுதத் பெரேரா அசோசியேட்ஸ் வழங்கியிருந்தது. நுகர்வோரையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க, இத்தொழில்துறையில் உள்ள பங்குதாரர்களுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
போலியான உதிரிப் பாகங்கள் அடையாளம் காண்பதற்கு கடினமாகும். ஏனெனில் அவை அசல் பாகங்கள் போன்றதாக பிரதி செய்யப்பட்ட வணிக இலச்சினைகளுடனும் பொதியிடலுடனும் வருகின்றன. வாகனங்கள், ட்ரக்குகள், மோட்டார் சைக்கிள்களுக்கான பிரேக் பேட்கள் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பாகங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்த சிக்கலாக அமைகின்றது. பெரும்பாலும், இந்த போலி உதிரிப் பாகங்கள் உரிய பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்வதில்லை.இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆபத்தான நிலை உருவாகிறது.