சிந்து சமவெளி திராவிட நாகரிகம் என்கிற கண்டுபிடிப்பு, இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், இந்த கண்டுபிடிப்பை நான் நன்றியுடன் திரும்பி பார்க்கிறேன் என்று ஜோன் மார்ஷல்-க்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஆங்கிலேய தொல்லியல் துறை அதிகாரியான சேர் ஜோன் மார்ஷல், ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் அறிக்கையை 20 செப்டெம்பர் 1924 இல் வெளியிட்டார். அந்த அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உலகுக்கு அறிவித்தார். இந்த அறிவிப்பு செய்து நூறு ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஆய்வை மேற்கோள் காட்டி, “இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது. காலநிலை மாற்றத்தால் அங்கிருந்த மக்கள் மெல்ல இந்தியா முழுக்க பரவினர். இந்த காலத்தையும், சங்க இலக்கிய காலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் ஒரு புள்ளியில் இணைகிறது” என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேர் ஜோன் மார்ஷல்-க்கு நன்றி தெரிவித்திருக்கிறார். “சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று, சேர் ஜோன் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் நன்றியுடன் திரும்பிப் பார்த்து, அவருக்கு கூறுகிறேன். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி சேர் ஜோன் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.