Thursday, October 10, 2024
Home » இஸ்லாத்தில் இளமையின் முக்கியத்துவம்

இஸ்லாத்தில் இளமையின் முக்கியத்துவம்

by sachintha
September 20, 2024 12:02 pm 0 comment

மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது.

‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும் உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை சிசுவாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் இளமையை நீங்கள் அடைவதற்காகவும், பின்னர் உங்கள் வயோதிபத்தை நீங்கள் அடைவதற்காகவும் (உங்களுக்கு ஆயுளை ஏற்படுத்தினான்.) இதற்கு முன்னரே மரணிப்போரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும், நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்தான்.)’ (அல் குர்ஆன் 40:67)

இந்த வசனம் சிறு பிள்ளைப் பருவம் இளமைப் பருவம், முதுமைப் பருவம் என மனித வாழ்க்கைப் படித்தரத்தைப் பிரிக்கின்றன.

‏’அல்லாஹ்தான் உங்களைப் பலவீனத்திலிருந்து படைத்தான். பின்பு, அவனே பலவீனத்தின் பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பின்பு, பலத்தின் பின்னர் பலவீனத்தையும் (முதுமையின்) நரையையும் அவன் ஏற்படுத்தினான். அவன் நாடுவதைப் படைப்பான். அவன் யாவற்றையும் அறிந்தவன், பேராற்றலுடையவன்.’

(அல் குர்ஆன் 30:54)

இவ்வசனத்தில் குழந்தைப் பருவம், முதுமைப் பருவம் என்பவற்றை பலவீனமான பருவமாகக் கூறும் அல்லாஹ் இளமைப் பருவத்தை பலமான பருவம் என்றும் குறிப்பிடுகிறான். பலம்மிக்க இளமைப் பருவத்தை உடையவர்கள்தான் சமூகத்தில் உள்ள சிறுவர்கள், முதியவர்கள் எனும் பலவீனமான பருவத்தினரைப் பாதுகாப்பவர்களாகவும் பராமரிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இஸ்லாம் இளமையும், துடிப்பும் உள்ள இளைஞர்கள் சமூகத்தின் காவலர்களாகவும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைத்து சக்திகளும் இளைஞர்களையே குறிவைத்துள்ளன. இளைஞர்களை சுய சிந்தனையுடையவர்களாக வாழ விடாமல் தடுப்பதற்காக அவர்களை போதைக்கும், ஆபாசத்திற்கும், கேளிக்கைகளுக்கும் அடிமையாக்குவது, அவர்களது வாழ்வை இலட்சியமற்றதாக மாற்றுவது என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன. இதேவேளை, இளமை பற்றி தப்பான பல கண்ணோட்டங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளன. ஆனால், இஸ்லாம் இளமையை பொறுப்புக்களின் ஆரம்பப் பருவமாகப் பார்க்கின்றது.

உறங்குபவர் விழிக்கும் வரை ‘சிறுவர் பருவ வயதை அடையும் வரை, பைத்தியக்காரர் புத்தி தெளியும் வரை (செய்யும் தவறுகளைப்)பதிவதை விட்டும் பேனை உயர்த்தப்பட்டு விட்டது’ என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

(ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், நஸாஈ, இப்னு குஸைமா)

இந்த ஹதீஸில் சிறு பிள்ளைப் பருவம் பொறுப்பற்றது என்றும் இளமைப் பருவத்தில் இருந்து செய்யப்படும் தவறுகள் பதியப்படும் என்றும் கூறுகின்றது. எனவே, பருவ வயதை அடைந்தவர்கள் பக்குவமாக இருக்க வேண்டும். தப்புத் தவறுகளைச் செய்வதற்குரிய பருவம் அல்ல இளமைப்பருவம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இளமை என்பது ஆற்றல்மிக்கது. இந்த ஆற்றல் மிக்க பருவம் உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அதனைப் பாழ்படுத்தி விடக் கூடாது. இளைஞர்களின் இளமை, சக்தி, ஆற்றல் என்பன அவர்களது எதிர்கால மற்றும் மறுமை நலனுக்காகவும் அவர்களது குடும்பம், ஊர், சமூகம், மனித இனம் என்பவற்றின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

‘உனது முதுமை வருவதற்கு முன் உனது இளமையைப் பயன்படுத்திக் கொள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்: நஸாஈ, ஹாகிம்)

கல்வியைத் தேடுவது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவது, உழைப்பது, குடும்பத்தைக் காப்பது, ஊருக்கும் சமூகத்திற்கும் நல்லது செய்வது, தனிப்பட்ட வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவது, இவை அனைத்துக்கும் ஏற்ற பருவமே இளமைப் பருவமாகும்.

இன்றைய இளைஞர்களின் சக்திகளெல்லாம் வீணாக விரையமாகின்றன. எத்தனையோ தந்தையர்கள் 10-20 வருடங்களாக வெளிநாடுகளில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது இளமை, ஆரோக்கியம், உடல் சுகம், உள அமைதி அத்தனையையும் பாலை வன மண்ணில் போட்டுப் புதைத்துவிட்டு தனது மனைவி மக்களின் நலனுக்காக மாடாய் உழைக்கின்றனர்.

தாய்-தந்தையின் கஷ்டத்தை உணராத இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் தொல்லையாக தமது வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். தந்தையின் உழைப்பைத் தவறான வழியில் செலவு செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் முதுமையில் செய்யும் இறை வழிபாட்டை விட இளமையில் செய்யும் இறை வழிபாடு ஏற்றம் மிக்கதாகும். இந்த வகையில் இளமைப் பருவத்தை இறைவனுக்கு மாறு செய்யும் விதத்தில் கழித்துவிடாமல் இறைவனுக்கு ஏற்ற விதத்தில் கழிப்பது இன்றியமையாததாகும்.

மறுமையில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் 07 கூட்டத்தினருக்கு தனது நிழலில் இடம் கொடுப்பான் எனக் கூறிய நபியவர்கள் அதில் ஒரு கூட்டமாக தனது இளமைக் காலத்தை இபாதத்தில் கழித்த இளைஞர்களையும் குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: புஹாரி)

எனவே, இளமை என்பது இறைவனுக்கு மாறு செய்வதற்கல்ல. மாறாக, இறைவனை வழிபடுவதற்கான பருவம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

பிந்த் இஸ்மாயீல்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x