இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் முழு மனித வாழ்வுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அன்னாரின் வாழ்வும் வழிகாட்டல்களும் உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டம் மிக்கவையாகவும் எல்லாக் காலங்களுக்கும் நடைமுறைச் சாத்தியமானவையும் இருக்கக்கூடியவையாகும்.
அந்த வகையில் மனிதர்களில் ஒரு பிரதான அங்கமாக விளங்கும் பெண்கள் தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் வழங்கியுள்ள போதனைகள், அறிவுரைகள் மாத்திரமல்லாமல் அவர்களுடன் நடந்து கொண்டுள்ள ஒழுங்குமே முழு உலகிற்கும் முன்மாதிரியாகும்.
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு சிறிய பேத்தி பிள்ளை இருந்தாள். அவளது பெயர் உமாமா (ரழி) என்பதாகும். இவர் ஸைனப் (ரழி) அவர்களின் மகளாவார். தந்தை பெயர் அபுல் ஆஸ் இப்னு அல் ரபீஃ (ரழி) என்பதாகும். நபியவர்கள் தனது பேத்தியை மிகக் கடுமையாக நேசித்தார்கள். தொழுகையில் அவரை சுமந்து கொண்டு தொழுவார்கள். ஸூஜூத் செய்யும் போது அவரைக் கீழே வைப்பார்கள். நிலைக்குவரும் போது சுமந்து கொள்வார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)
ஆனால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண் பிள்ளைகள் மதிக்கப்படவில்லை. இருந்தும் நபியவர்களின் செயல்பாடு ஜாஹிலிய்ய மரபுக்கு முரணாக அமைந்திருந்தது. இதனூடாக உலகிற்கும் அரபு சமூகத்திற்கும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை அன்னார் வழங்கினார்.
இதுமாத்திரமன்றி பெண் பிள்ளைகள் கண்ணியப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சீராக வளர்க்கப்படல் வேண்டும். எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவர்களாகவும் நாகரிகத்தைக் கட்டியெழுப்புபவர்களாகவும் ஆளுமையுள்ளவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்ற விடயத்திலும் நபி (ஸல்) அவர்கள் கவனம் செலுத்தினார்கள். இப்படி வளர்க்கின்றவர்கள் மறுமையில் தன்னோடு நெருக்கமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.
‘யார் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவ வயதை அடையும் வரை (செலவளித்து, சிறப்பாக) வளர்க்கிறாரோ அவரும் நானும் இவ்வாறு இருப்போம் என்று தனது இரு விரல்களையும் இணைத்துக் காட்டினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி)
ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் ஆன்மாவும், அறிவும், உணர்வுகளும் உள்ளன. இந்த உலகம் ஆண்களுக்கு மாத்திரம் உரியதல்ல. பெண்களுக்கும் இதில் உரிமையுண்டு. மார்க்க விடயங்களில் ஆண்கள் இஜ்திஹாத் என்ற ஆய்வு செய்வது போன்று பெண்களும் முயற்சிக்கலாம். அடிப்படையில் இருவரும் சமமானவர்கள் தான். சில விதிவிலக்கான விடயங்களில் தான் அவர்களுக்கும் ஆண்களுக்குமிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஆண்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு எஞ்சியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு படுதோல்வி அடைந்திருந்த ஜெர்மனியைக் கட்டியெழுப்பியவர்கள் பெண்கள் தான்.
‘ஆண்கள் பெண்களுக்கு சமமானவர்கள்’ என்ற நபிமொழியும் இதனையே குறிக்கிறது. (ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி)
சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக பெண்களின் பங்களிப்பை நபியவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் சமூக செயற்பாடுகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கவில்லை. அவர்கள் கற்றுக்கொண்டார்கள், கற்பித்தார்கள், செயல்பட்டார்கள். அவர்கள் உழைப்பதற்கும் செலவு செய்வதற்கும் கணவனைத் தெரிவு செய்வதற்கும் கணவனிடமிருந்து பிரிந்து வாழ்வதற்கும் மார்க்க, சமூக, அரசியல் விவகாரங்களில் அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதற்கும் உரிமை பெற்றிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியான கதீஜா (ரழி) அவர்கள் நபியவர்களின் இறைத்தூதை முதலாவது ஏற்று, நபியவர்களுக்கு ஆறுதல் கூறி, வரகத் இப்னு நவ்பல் என்ற பழைய வேதங்களைக் கற்றிருந்த ஒரு அறிஞரிடம் அழைத்துச் சென்று உறுதிப்படுத்தினார். இது இன்றைய மொழியில் ‘உளவியல் முதலுதவி’ அல்லது ஆற்றுப்படுத்தல் ஆகும். அத்தோடு தனது செல்வத்தை மார்க்கத்தினதும் சமூகத்தினதும் வளர்ச்சிக்காக செலவு செய்த ஒரு செல்வந்தப் பெண்ணும் ஆவார் அவர்.
ஆயிஷா (ரழி) அவர்கள் பல ஹதீஸ்களைக் கற்பித்த ஆசிரியராகவும் ஒரு வைத்தியராகவும் கவிதைகளை எழுதிய கவிதாயினியாகவும் விளங்கினார்கள். அவர் சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். 350 மாணவர்கள் அவரிடம் கல்வி கற்றுள்ளார்கள். தந்தை அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), அபூ ஹூரைரா (ரழி), அபூ மூஸா அல் அஷ்அரீ (ரழி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), போன்ற பெரிய ஸஹாபாக்கள் அவரிடம் ஹதீஸ்களைக் கற்றுள்ளார்கள். சொத்துக்களைப் பங்கீடு செய்யும் ‘மீராஸ்’ என்ற கலையிலும் அவருக்கு நல்ல தெளிவு இருந்தது.
எனவே மூத்த ஸஹாபாக்கள் அவரிடம் சென்று அது பற்றிக் கேட்டறிந்து கொண்டார்கள் என்று மஸ்ரூக் (ரஹ்) என்ற தாபிஈ குறிப்பிடுகிறார். அத்தோடு அவர் மனிதர்களில் அதிகம் சிறந்தவராகவும் விளக்கமும் அறிவும் உள்ளவராகவும் பெரும்பான்மையினர் கருதினார்கள் என்று அதாஃ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) கருதுகின்றார்கள். ஆயிஷா (ரழி) அவர்களின் மிக நெருக்கமான மாணவனாகிய உர்வா இப்னு ஸூபைர் ரழி) அவர்கள் ‘ஆயிஷா (ரழி) அவர்களை விட மிக சிறப்பான மார்க்க விளக்கம், மருத்துவ தெளிவு,கவியாற்றல் உள்ள ஒருவரை நான் காணவில்லை’ என்று குறிப்பிடுகிறார்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஸஹாபாப் பெண்கள் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். ‘எனக்கு ஸூபைர் இப்னுல் அவாம் (ரழி) அவர்களைத் திருமணம் முடித்து வைத்திருந்தார்கள். அவருக்கு விவசாய நிலங்களோ அடிமைகளோ இருக்கவில்லை. மாற்றமாக நீர் இழுக்கக்கூடிய ஒரு ஒட்டகையும் ஒரு குதிரையும் இருந்தது. நான் குதிரைக்குத் தீன் கொடுப்பேன், நீர் புகட்டுவேன், பெரிய பாத்திரங்களையும் வாளிகளையும் செய்வதற்காக பதனிடப்பட்ட தோலைத் தைப்பேன், ரொட்டி சுடுவதற்காக மாவைப் பிசைவேன். நான் சிறப்பாக மாவு பிசைய மாட்டேன். எனவே அன்ஸாரி அடிமைப் பெண்கள் எனக்கு அதனை செய்து தருவார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸூபைர் (ரழி) அவர்களுக்குக் கொடுத்த நிலத்திலிருந்து ஈத்தம் விதைகளை எனது தலையில் வைத்து நான் சுமந்து வருவேன். இது சுமார் மூன்றில் இரண்டு பர்ஸக் (4கி.மீ) தூரம் இருக்கும்.
(ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)
‘எனது மாமி தலாக் சொல்லப்பட்டு விட்டார். அவர் அவரது ஈத்த மரத்திலிருந்து அறுவடை செய்ய விரும்பினார். அவர் அவ்வாறு செய்வதை ஒரு ஆண் கடிந்து கொண்டார். இவ்விடயத்தை அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அதற்கவர் ‘நீங்கள் அறுவடை செய்யுங்கள். அப்போதுதான் உங்களால் ஸதகா செய்யவோ நல்ல விடயங்களை முன்னெடுக்கவோ முடியும்’ என்றார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)
உம்மு ஸுலைம் (ரழி), உம்மு அதிய்யா (ரழி), ரபீஅதுல் அஸ்லமிய்யா (ரழி) போன்றவர்கள் வைத்தியம், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தனது மனைவி ஸைனப் (ரழி) அவர்களை நீண்ட கையுடையவர் என்று வர்ணித்தார்கள். அவர் தமது கரங்களால் பல வேலைகள் செய்து ஸதகா கொடுக்கக் கூடியவராக இருந்துள்ளார்கள். இது போன்றே இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் மனைவி ராஇதா (ரழி) அவர்களும் கைவேலைப்பாடுகள் மூலம் உழைத்து அதனை நல்ல விடயங்களில் செலவு செய்துள்ளார்கள். அத்தோடு தனது பிள்ளைக்கும் செலவு செய்துள்ளார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்கள் தோல்களைப் பதனிடுவார்கள். ஒரு நாளில் 40 தோல்களை அவர் பதனிடுவதாக குறிப்புகள் காணப்படுகின்றன.
இவை நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து சில எடுத்துக்காட்டுகள் மாத்திரமே. இதுபற்றிய விரிவான விளக்கங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. ஆகவே நபி (ஸல்) அவர்களது காலப் பெண்கள் குறித்து அறிந்து கொள்வதில் கவனம் செலுத்துவது பயன்மிக்கதாக அமையும் எனலாம்.