நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடாத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இத்தேர்தலின் நிமித்தம் நாளை காலை 7.00 முதல் மாலை 4.00 வரை வாக்களிப்பு இடம்பெற உள்ளது.
இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கென பாடசாலைகள், மத வழிபாட்டு தளங்கள் உட்பட நாடெங்கிலும் 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் நிமித்தம் நாடெங்கிலுமுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று 20 ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டு வாக்குசாவடிகள் அமைப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை முதல் வாக்கு பெட்டிகளும் கடமைக்கான உத்தியோகத்தர்களும் மாவட்ட மட்ட தேர்தல் அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அத்தோடு வாக்களிப்பு நிறைவுற்றதும் வாக்குகளை எண்ணவென 1713 மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேநேரம் இத்தேர்தல் பாதுகாப்பு கடமையில் 63 ஆயிரம் பொலிஸாரும் 10 ஆயிரம் சிவில் பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக 1500 விஷேட அதிரடிப்படையினரும் பணிக்கு அமர்த்தப்பட இருக்கின்றனர். அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்திருக்கிறார்.
சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை உச்சபட்சம் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேநேரம் தேர்தல் தினத்தில் வாக்களிப்பு நிலையங்களில் வன்முறைகளை மேற்கொள்ளவோ, முறைகேடுகளில் ஈடுபட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமாயின் அத்தகைய வாக்குச்சாவடிகளின் வாக்களிப்பு இரத்து செய்யப்பட்டு பின்னர் மீண்டும் அந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிப்பு நடாத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தேர்தலின் பின்னர் வன்முறைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த சூழலில் அமெரிக்கா, ‘ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் நாட்டில் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகிறது. அதனால் இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து தம் பிரஜைகளுக்கு முன்னறிவித்தலை விடுத்திருக்கிறது.
மேலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வன்முறைகள் ஏற்படலாம் என்று ஏற்கனவே சில தரப்புகளும் தெரிவித்தும் உள்ளன.
இவ்வாறான பின்புலத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்கை அச்சொட்டாக நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாரும் முப்படையினரும் உச்ச பட்ச கவனம் எடுத்துக் கொண்டுள்ளனர். சட்டத்திற்கு முன் அனைத்து தரப்பினரும் சமம். அனைவரும் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்க வேண்டுமேயொழிய சட்டத்தைக் கையில் எடுக்க எவருக்கும் முயற்சிக்கலாகாது. அனைத்து மக்களது எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.அதனால் ஜனாதிபதி தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடாத்த ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அ
அந்த வகையில் தேர்தல் தினத்தன்றும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் பொருளாதார மத்திய நிலையங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட முக்கிய கேந்திர நிலையங்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் நிமித்தம் 3000 படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் நாடெங்கிலும் 269 வீதிச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. பொலிஸாரையும் விஷேட அதிரடிப்படையினரையும் உள்ளடக்கி இச்சாவடிகள் அமைக்கப்படும். அவற்றில் 3250 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான வாகனங்களும் அவற்றில் பயணிப்பவர்களும் இத்தகைய சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
இவ்வாறு இந்த ஜனாதிபதித் தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடாத்துவதற்கென ஏற்பாடுகள் விரிவாக முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த ஏற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். இதனை ஒவ்வொரு அபேட்சகரும் அனைத்து வாக்காளர்களும் தங்கள் பொறுப்பாகக் கருதி செயற்பட வேண்டும். அப்போது தேர்தல் அமைதியாக நடைபெறும். இதற்காக ஒவ்வொரு வாக்காளரும் ஒத்துழைப்பு நல்குவது இன்றியமையாததாகும்.