Orient Finance நிறுவனம், 2023/24 ஆண்டில் தனது நிதியியல் பெறுபேறுகள் மூலமாக பாரிய திருப்புமுனையை எட்டியுள்ளதுடன், கடந்த ஆண்டில் ஏற்பட்ட ரூபா 72 மில்லியன் நட்டத்துடன் ஒப்பிடுகையில், 584% என்ற மகத்தான வளர்ச்சியுடன், ரூபா 348.53 மில்லியன் தொகையை வரிக்குப் பின்னரான இலாபமாக பதிவாக்கியுள்ளது. மொத்த சொத்துக்கள் 17% ஆல் அதிகரித்து, ரூபா 20,477 மில்லியனாக காணப்பட்டதுடன், வழங்கல் துறைசார் விரிவாக்கம் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் நிறுவனத்தின் வலுவான அணுகுமுறையின் உந்துசக்தியுடன், 8% என்ற தொழிற்துறையின் சராசரிக்கும் மேலாக, விரைவுபடுத்தப்பட்ட வளர்ச்சியைப் பிரதிபலித்துள்ளது.
Orient Finance நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் மிகவும் போற்றத்தக்க வகையில் 81% ஆல் அதிகரித்து ரூபா 1.79 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், கூடுதலான கடன் வழங்கல்கள் மற்றும் மேம்பட்ட வட்டி இலாப வரம்புகளின் உந்துசக்தியுடன், கடன் நடவடிக்கைகளின் திறன்மிக்க முகாமைத்துவம் மற்றும் பிரதான வணிக தொழிற்பாடுகளில் மேம்பட்ட இலாபத்திறன் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது. மேலும், வட்டி அல்லாத வருமானம் 17% ஆல் அதிகரித்து, ரூபா 266 மில்லியனாகக் காணப்பட்டதுடன், கட்டண அடிப்படையிலான சேவைகளின் வலுவான பெறுபேற்றுத்திறன்கள் இதற்கு உதவியுள்ளன. நிறுவனத்தின் பல்வகைப்பட்ட வருமான மார்க்கங்கள் மற்றும் பாரம்பரிய வணிக செயற்பாடுகளுக்கு அப்பால், சந்தையில் வாய்ப்புக்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனத்தின் ஆற்றல் ஆகியவற்றை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
செலவு-வருமான விகிதத்திலும் பாராட்டத்தக்க மேம்பாட்டை நிறுவனம் அடைந்துள்ளதுடன், கடந்த நிதியாண்டில் காணப்பட்ட 93.44% இலிருந்து 66.53% ஆக குறைவடைந்துள்ளது. மேலும், பங்கு மீதான வருமானம் கடந்த நிதியாண்டில் காணப்பட்ட -2.18% இலிருந்து கணிசமாக மேம்பட்டு, 10.13% ஆக அதிகரித்துள்ளது.