ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 1358 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள் ஊடாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு பஸ்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 175 பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பண்டுக ஸவர்ணஹங்ச குறிப்பிட்டார். அத்துடன், வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி, நேற்று (19)முதல் விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்றும் (20) தூரப் பிரதேசங்களுக்கான விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை வரையிலான விசேட ரயில் சேவையொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்ததுள்ளது.
இன்றும் (20) நாளையும் (21) இந்த ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணிப்பதுடன் 22ஆம் திகதி காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்