Home » தேர்தலுக்கான அமைதிக்காலம் அர்த்தபூர்வமாக அமையட்டும்!

தேர்தலுக்கான அமைதிக்காலம் அர்த்தபூர்வமாக அமையட்டும்!

by sachintha
September 19, 2024 6:00 am 0 comment

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசார காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவுற்றுள்ளது.

முழு நாட்டிலும் நேற்று நள்ளிரவு வரையும் காணப்பட்ட தேர்தல் பிரசார கால பரபரப்பு, ஆர்ப்பாட்டங்கள் எதுவும் அற்ற அமைதி நிலையோடு இன்றைய காலைப் பொழுது புலர்ந்துள்ளது. இதே நிலை அடுத்துவரும் 48 மணித்தியாலயங்களுக்கு நீடிக்க வேண்டும். அதுவே தேர்தல் சட்டங்களின் உத்தரவாகும்.

தேர்தல் சட்ட ஏறபாடுகளின்படி அடுத்துவரும் 48 மணித்தியாலயங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கை எதனையும் முன்னெடுக்க முடியாது. இது அமைதிக்கான காலப்பகுதி என அடையாளப்படுத்தப்படுகிறது. அதனைப் பேணிப்பாதுகாப்பதே சட்டம் ஒழுங்கை மதித்து செயற்படுவதாக அமையும்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின. அன்று தொடக்கம் கடந்த ஒரு மாத காலம் முழுவதும் பரந்த அடிப்படையில் இப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதிலும் கடந்த இரண்டொரு வாரங்கள் இப்பிரசாரங்கள் தீவிரம் அடைந்திருந்தன.

இத்தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு அபேட்சகரும் தங்களது கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் வாக்காளர்கள் மத்தியில் முன்வைத்துள்ளனர். அத்தோடு வாக்குறுதிகளையும் அள்ளி வீசியுள்ளனர். இதன் ஊடாக வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவூட்டல்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதனால் தற்போது எஞ்சியிருப்பது வாக்காளர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். அவர்கள் இந்த 48 மணித்தியாலங்களுக்குள் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் உள்வாங்கிய கொள்கைகளையும் திட்டங்களையும் சீர்தூக்கிப் பார்த்து நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். அந்தத் தீர்மானம் நாடு சுபீட்சம் அடைந்து கொள்ளவும் மக்களுக்கு வளமான வாழ்வு கிடைக்கப்பெறவும் வழிவகுப்பதாக அமைய வேண்டும்.

இல்லாவிடில் கடந்த காலங்களைப் போன்று மீண்டும் நெருக்கடிகளுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுப்பதைத் தவிர்க்க முடியாது போய்விடும். இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது ஒவ்வொரு வாக்காளரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும்.

கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் காணப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரசாரகால பரப்பு, கொதிநிலை நேற்று நள்ளிரவோடு முடிவுற்றதோடு எங்கும் அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதகாலமாக நாட்டில் காணப்பட்ட பரபரப்பு நிலையில் இன்று ஓய்வுநிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஒரு மாதத்திற்கு முன்னர் குறிப்பாக கடந்த மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலை மீண்டும் உருவாகியுள்ளது.

அடுத்துவரும் 48 மணித்தியாலயங்களுக்கும் இதே நிலையைப் பேணிக் கொள்வது வாக்காளர்களின் பொறுப்பாகும். ஏனெனில் நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலே நாளைமறுதினம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. அந்த தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதற்கு வாக்காளர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் அமையும்.

ஓரிரு அபேட்சகர்களின் ஆதரவாளர்கள் இக்காலப்பகுதியில் தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறும் வகையில் செயற்பட முயற்சிக்கலாம். வன்முறைகளை தூண்டிவிடவும் குழப்பங்களை விளைவிக்கவும் எத்தனிக்கலாம். அற்ப நலன்களை அடைந்து கொள்வதை இலக்காகக் கொண்டே அவர்கள் இவ்வாறு செயற்படுவர் என்பதை வாக்காளர்கள் மறந்துவிடலாகாது.

அதன் காரணத்தினால் அத்தகையவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவோ ஒத்துழைப்போ நல்கக்கூடாது. அவ்வாறான செயற்பாடுகளையும் முயற்சிகளையும் நிராகரிக்கத் தவறக்கூடாது. சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பதற்கு எவருக்கும் துணை போகவும் கூடாது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாடுகளுக்கு அமைய அபேட்சகர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களும் செயற்பட்டாலேயே தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறும்.

இவற்றுக்கு மாற்றமாக செயற்படும் ​போது சட்டம் ஒழுங்கு மாத்திரமல்லாமல் தேர்தல் சட்டவிதிகள் கூட மீறப்படுவதாகவும் பாதிக்கப்படுவதாகவும் அமைந்துவிடும். அது நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் ஊறுவிளைவிப்பதாகவும் அமைந்துவிடும். அத்தோடு ஜனநாயகம் பாதிக்கப்பட துணை போவதாகவும் கூட அமையலாம். அத்தகைய தவறானதும் பிழையானதுமான செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் துணைபோகலாகாது. இன்று நாட்டில் எவ்வாறு அமைதி நிலை கோலோச்சுகிறதோ, இதே நிலையை தொடர்ந்தும் பேணுவது வாக்காளர்களின் பொறுப்பாகும். அதன் ஊடாக தேர்தலுக்கான அமைதிக் காலம் அர்த்தபூர்வமானதாக அமைந்துவிடும். அதுவே ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினராதும் விருப்பமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x