பப்புவா நியூகினியில் தங்கச் சுரங்கம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இரு போட்டிப் பழங்குடி மக்கள் இடையே இடம்பெற்றிருக்கும் துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலைத் தடுப்பதற்கு சூடு நடத்துவது உட்பட பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக நாட்டின் பொலிஸ் அணையாளர் குறிப்பிட்டுள்ளார். மோதல் இடம்பெற்ற பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு இரவு நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியின் மத்திய மலைப் பிராந்தியத்தில் உள்ள பொர்கேரா தங்க சுரங்கத்தை சூழவே பதற்றம் நீடிக்கிறது.
இங்கு பியன்டே பழங்குடியினருக்குச் சொந்தமான நிலத்தில் சகார் பழங்குடியினர் குடியேறிய நிலையிலேயே மோதல் வெடித்துள்ளது.