சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை ஆகிய இரு விருதுகளையும் இலங்கையின் துனித் வெள்ளாலகே மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம தட்டிச்சென்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபித்ததை அடுத்தே வெள்ளாலகே இந்த கௌரவத்தை பெற்றிருப்பதோடு ஹர்ஷிதா இலங்கை மகளிர் அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் அபாரமாக செயற்பட்டிருந்தார்.
முன்னதாக ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் ஒரே மாதத்தில் ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் ஐ.சி.சி. கௌரவத்தைப் பெற்றுள்ளனர். அது இந்த ஆண்டு ஜூனில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஸ்மிரித்தி மந்தனா மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாக பதிவாகினர்.
இதன்போது வெள்ளாலகே தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோருடன் போட்டியிட்டே மாதத்தின் சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல உதவிய வெள்ளாலகே அந்தத் தொடரின் நாயகனாக தெரிவானதோடு அவர் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சோபித்தார்.
மறுபுறம் ஹர்ஷிதா அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஒருநாள் சதம் ஒன்றை பெற்றதோடு அவர் ஒருநாள் சர்வதேச போட்டியில் சதம் பெற்ற மூன்றாவது இலங்கை வீராங்கனையாக இடம்பெற்றார்.