மனிதன் மாண்புடன் படைக்கப்பட்டவன். இயற்கையிலேயே மதிப்புடன் படைக்கப்பட்டாலும் பணம், பதவி, பட்டம் போன்ற அணிகலன்கள் இருந்தால் மட்டுமே தான் மதிப்புடன் வாழ்வதாக ஒரு மாய எண்ணம் அவனுக்குள் விதைக்கப்பட்டு, அது வளர்ந்து, விழுது விட்டு பரந்து கிடக்கிறது.
இந்த மதிப்புடன் வாழ்தல் என்பதில் துன்பங்களோ , துயரங்களோ, கஷ்டங்களோ இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். ஏன் இயற்கையான சாவு கூட அவனுக்கு அருகில் வராமல் இருக்க வேண்டும் என்று எண்ணற்ற விதத்தில் போராடுகிறான். இங்ஙனம், மலர்ப் பாதை மட்டுமே வாழ்க்கைப் பாதையாக இருக்க வேண்டும் என்பது மனிதரின் சிந்தனையாகவும், அதுவே மனிதருக்கு ஏற்றவையாகவும் இருக்கிறது.
ஒரு சொல்லால் எல்லாவற்றையும் படைத்தவர், ஒரே மகனை மீட்பிற்காய் தந்தவர், நாம் ஒன்றுபட்டு வாழ்வதில் பெருமகிழ்ச்சியும் கொள்கிற கடவுள், எல்லாவற்றையும் கடந்த அவர் துன்பத்தைத் தன் அக வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார். தன் ஒரே மகனை பாடுகள் பட அனுமதித்தார்.
சிலை செதுக்கப்படும்போது உளிக்கு வலிக்கும் என்று செதுக்குபவன் நினைப்பானா? பாறைக்குச் சேதம் ஏற்படுகின்றது என செதுக்காமல் இருப்பானா? கை வலிக்கிறது என எடுத்த வேலையை நிறுத்துவானா? சிற்பியின் கை வலி, உளியின் வெப்பம், பாறையின் சிதைவு இவை அனைத்தின் காரணமாக உருவாகும் அற்புதமே பார்ப்போர் வியக்கும் அற்புதச் சிலைகள். சிரமங்களும், துன்பங்களும், தடைகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில், வளர்ச்சியில் இன்றியமையாத காரணிகள். இதை உணர்கின்ற மனிதன் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறான்.
படைக்கப்பட்டவை அதன் மாண்பிலிருந்து விலகியதை மீட்பதற்காகவே வந்த இறைமகன் சுமைகளைத் தன் மேல் ஏற்றுக் கொள்ளத் தயாரானார். நான் கிளர்ந்தெழவில்லை : விலகிச் செல்லவுமில்லை. என்னை அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற எசாயாவின் வார்த்தை இதை வெளிப்படுத்துகின்றன.
மானிட மகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாட்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் என்ற இயேசுவின் வார்த்தைகள் மெய்யாகிறது (மத் 16:21).
இயேசுவில் நம்பிக்கையும், அவர்தம் பாடுகள் வழியாக நம்மை மீட்கிறார் என்பதில் விசுவாசமும் கொண்டுள்ள இறைமக்களின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நம்முடைய நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும்.
குறிப்பாக சமூகத்தின் விளிம்பிலும், ஒடுக்கப்பட்ட நிலையிலும் இருந்துகொண்டு துன்பமே வாழ்வின் பாதை, துயரமே அனுதின அனுபவம் என்று வாழ்கின்ற மக்களிடத்தில் வார்த்தையை மட்டுமல்ல, நம் தலைவராம், மீட்பராம் இயேசுவைப்போல நம் செயல்பாடுகளின் வழியாக அவர்களின் வாழ்வில் மாறுதலைக் கொணர முற்படுவோம்.
தான் என்று வாழ்கிறவர் மண்ணோடு மண்ணாகிப் போவர். அதே நேரத்தில் பிறர் நலச் சிந்தனையோடு வாழ்பவர், பிறரின் துன்பத்தில் பங்கேற்பவர், என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார் (மத் 10 : 39) என்ற ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்குவர். வாழ்வோம், வாழ்விப்போம்.
அருட்பணி முனைவர் ம.அருள்