சர்வதேச எழுத்தறிவு தினத்தினை (செப்டெம்பர்- 8) சிறப்பிக்கும் வண்ணம் வாழைச்சேனை பொதுசன நூலகத்தினால் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் நடத்தப் பட்டன.
கோறளைப்பற்று பிரதேசசபையின் கீழ் இயங்கும் வாழைச்சேனை பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச எழுத்தறிவு தினத்தினைச் சிறப்பிக்கும் வண்ணம் தரம்-4 மாணவர்களுக்கான Spelling Master எனும் ஆங்கில எழுத்தறிவுப் போட்டி நடத்தப்பட்டது.
நூலகத்தின் அண்மையில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயம், வாழைச்சேனை வை.அகமட் வித்தியாலயம், பிறைந்துரைச்சேனை அஸ்கர் வித்தியாலயம், விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் இந்த நேரடிப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.
வாழைச்சேனை பொதுசன நூலகத்தின் பொறுப்பாளர் திருமதி த.தாரணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்தினைச் சேர்ந்த ஆங்கில மற்றும் தமிழ் மொழி இலக்கியத் துறைகளில் செயற்பட்டு வருகின்ற இளந்தலைமுறை மொழி ஆர்வலர்களும் செயற்பாட்டாளர்களுமான அனுசதுர்த்திகா, தமிழூராள் அனுஸ்திக்கா, எம்.ஐ.எஃப்.இர்ஷானி ஆகியோர் நடுவர்களாக கலந்து போட்டி நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
போட்டிகள் மாணவர்களின் மத்தியில் நேரடியாக வாய்மொழி மூலமாக நடைபெற்று முடிந்த பின்னர் மூன்று சுற்றுக்களாக நடத்தப்பட்ட போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்படுகின்ற சர்வதேச எழுத்தறிவு தினப் போட்டி நிகழ்வுகளுக்கு புதுக்குடியிருப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த சதீஸ்குமார் பிரதீபா குடும்பத்தினர் அனுசரணை வழங்கி வருகின்றனர்.