இரு வருட காலத்துக்கு முன்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கைத் தேசம் இன்றுமே முழுமையாக விடுபடவில்லை. கடுமையாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதென்பது இலகுவான காரியமல்ல. அவ்வாறு மீண்டெழுவதற்கு மேலும் சில வருடங்கள் தேவையாகின்றன.
உலகில் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளான சில நாடுகள் மீண்டெழுவதற்கு பத்து வருட காலம் தேவையாக இருந்தது. அதேநேரம் சில நாடுகள் இன்னுமே மீண்டெழாமல் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் வரலாறு சந்தித்திருக்காத மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருந்த எமது நாடு தற்போது மூச்சுவிடக் கூடியவாறு ஓரளவு மீண்டெழுந்திருக்கின்றது. இலங்கையானது இரு வருட காலத்தினுள் இத்தனை விரைவாக மீண்டுவிடுமென்று எவருமே கற்பனை செய்து பார்த்ததில்லை. இந்த அச்சம் காரணமாகவே இலங்கையில் இருந்து துறைசார் நிபுணர்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.
ஆனால் இரண்டு வருட காலத்தில் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத அற்புதம் நிகழ்ந்துள்ளது. இலங்கையினால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியுமென்ற உத்தரவாதத்தை சர்வதேசம் தற்போது கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் நம்பிக்ைக வைத்து உலக நாடுகள் இனிமேல் இலங்கைக்கு கடனுதவி வழங்க முடியுமென்று உறுதிப்படுத்தியிருக்கின்றன.
இலங்கையின் பொருளாதார மீள்ச்சிக்கு வழிவகுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் சர்வதேச ரீதியில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருவருட காலத்துக்கு முன்னர் எமது நாடு அரசியல் நெருக்கடியினாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் அல்லலுற்ற வேளையில், நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க எவருமே முன்வரவில்லை.
நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்குமாறு எதிரணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் அத்தனை பேருமே தயங்கியவாறு ஒதுங்கிக் கொண்டனர். மூழ்கிக் கொண்டிருக்கின்ற கப்பலில் பயணம் செய்ய முடியாதென்பதுதான் அந்தத் தயக்கத்துக்குக் காரணமாகும்.
ஆனாலும் இலங்கைத் தேசத்தை மீட்டெடுக்க முடியுமென்ற துணிச்சலான நம்பிக்ைகயுடன் நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அக்காலப் பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி தொடர்பாக எதிரும்புதிருமான கருத்துகள் நிலவின. ஐ.எம்.எப் உதவி பெறுவதை ஒரு தரப்பினர் எதிர்த்தனர். மற்றொரு தரப்பினரோ ஐ.எம்.எப் உதவியின்றி இலங்கையினால் மீட்சிபெற முடியாதெனத் தெரிவித்தனர். ஐ.எம்.எப் உதவியை நாடுகின்ற வழிமுறைகள் புரியாமல் மௌனமாகவிருந்த அரசியல்வாதிகளும் அப்போது இருந்தனர்.
இவ்வாறான நிலையில் ஐ.எம்.எப் உதவியை இலங்கை பெற்றுக் கொள்வதற்கான வழிகளைத் திறந்து விட்டவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவரது ஆற்றல், ஆளுமை, அனுபவம், நிர்வாகத்திறன், சர்வதேச செல்வாக்கு போன்றன காரணமாக ஐ.எம்.எப் உதவி சாத்தியமானது. இலங்கை இத்தனை விரைவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பதற்குக் காரணம் ஐ.எம்.எப் உதவிகள் ஆகும்.
இலங்கை இத்தனை தூரம் முன்னேற்றமடைந்துள்ள போதிலும், ஐ.எம்.எப் உதவி அவசியமில்லையென்று கூறுகின்ற எதிரணி அரசியல்வாதிகளும் இப்போது இல்லாமலில்லை. அதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யவிருப்பதாக அபத்தமாகக் கூறிகின்ற எதிரணி அரசியல்வாதிகளும் உள்ளனர். சர்வதேசரீதியிலான மாபெரும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இத்தனை துரும்பாக எண்ணுகின்ற பேதமைத்தனத்தை இன்றைய தேர்தல் காலத்தில் காண முடிகின்றது.
இலங்கை இன்னுமே பொருளாதார வீழ்ச்சியில் இருந்து முழுமையாக மீண்டெழாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்து குறித்து இலங்கையர்கள் அனைவரும் நன்கு சிந்திக்க வேண்டியுள்ளது.
“இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை. சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம். அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“மூன்றாவது மீளாய்வுக்கான காலம் குறித்து தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும். எனவே, ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர், புதிய அரசாங்கம் அல்லது இலங்கை மக்கள் செய்கின்ற தெரிவின் அடிப்படையில், வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர எதிர்பார்க்கிறோம். அதன்படி செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எம்.எப் குறித்தும், நாட்டின் பொருளாதாரம் தொடர்பாகவும் எதிரணி வேட்பாளர்கள் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்ற இக்காலத்தில், ஜூலி கொசெக் கூறியுள்ள கருத்து தொடர்பாக மக்கள் அவதானம் கொள்வது அவசியமாகின்றது.