முன்னே சுவாமி தரிசனஞ் செய்யும் பொருட்டுப் பிள்ளையார் உள்ளணையும் போது எதிர்செல்லாமல் ஒரு பக்கத்திலே ஒதுங்கி நின்ற பாண்டிமாதேவியார் முன்னே வர குலச்சிறைநாயனார் பிள்ளையாரை வணங்கிநின்று, “சுவாமி! இங்கே சிரசின்மேற் கைக்குவித்துக் கொண்டு வருகின்றவரே பாண்டிமாதேவியார்” என்று விண்ணப்பஞ்செய்ய; பிள்ளையார் பெருங்களிப்போடு விரைந்து எதிரே சென்றார். பாண்டிமாதேவியார் பிள்ளையாருடைய திருவடிகளை விழுந்து நமஸ்கரித்தார். பிள்ளையார் திருவருள் சுரந்து அவரைத் திருக்கரத்தினால் எடுத்தருளினார். பாண்டிமாதேவியார் தம்முடைய மனக்கருத்து முற்றியது என்று நினைந்து, கண்ணீர் சொரிய, வாய் குழறி, “அடியேனும் அடியேனுடைய பதியும் செய்த தவம் என்” என்று சொல்லி வணங்கினார். “பிள்ளையார் பரசமயத்தார்களுளிருந்தும் சைவநெறியில் வாழும் அன்பரே! உம்மைக் காணுதற்கு வந்தோம்” என்று சொல்லி அவரை விடைகொடுத்து அனுப்பிக் கொண்டு, அடியார்கள் சூழ எழுந்தருளினார். எழுந்தருளும் பொழுது, திருவாலவாயிலிலே திருத்தொண்டு செய்து கொண்டிருக்கின்ற அடியார்களெல்லாரும் வந்து, பிள்ளையாரை நமஸ்கரித்து, “ஞானாதித்தராகிய சுவாமி! சமணிருள் நீங்கும்படி தேவரீர் இங்கே எழுந்தருளி வருதற்கு அடியேங்கள் அளவிறந்த தவங்களைச் செய்திருந்தோம்” என்றார்கள். பாலறாவாயர் அவர்களுக்கு அருள்செய்து, புறத்தணைந்து, குலச்சிறைநாயனார் திருமடங்காட்ட, பரிசனங்களோடும் அதில் எழுந்தருளியிருந்தார். பாண்டிமா தேவியாருடைய ஆஞ்ஞையின்படி குலச்சிறைநாயனார் பிள்ளையாருக்கும் பரிசனங்களுக்கும் விருந்தளித்தார்.
பகலிலே பிள்ளையார் அடியார்களோடு எழுந்தருளிவரக்கண்ட சமணர்களெல்லாரும் மனங்கலங்கி, சூரியன் அஸ்தமயமான பின், ஒருங்கு கூடினார்கள். பிள்ளையார் எழுந்தருளியிருக்கின்ற திருமடத்திலே திருத்தொண்டர்கள் ஓதுகின்ற திருப்பதிகவிசையின் பேரொலி செவிப்புலப்பட, சமணர்கள் அது பொறாராகி, “பாண்டியராஜனிடத்திற்சென்று சொல்வோம்” என்று துணிந்து அப்பாண்டியராஜனை அடைந்தார்கள்.
(தொடரும்)
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.