எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. எனவே, தமிழ் பேசும் மக்களும் இந்த வெற்றியின் பங்காளிகளாக வேண்டும். அப்போதுதான் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் இலகுவாக வென்றெடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்த குமார் தெரிவித்தார்.
வாக்குரிமையே மக்களின் ஜனநாயக ஆயுதம். அந்த ஆயுதத்தை நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், நமது முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவோம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே சுப்பையா ஆனந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர்,
ஜனாதிபதி தேர்தலுக்கான நாள் நெருங்கிவிட்டது. இன்னும் 6 நாட்களுக்கு பிறகு வாக்குரிமையை மக்கள் பயன்படுத்தப் போகின்றனர். இம்முறை வாக்காளர்கள் அனைவரும் தமது வாக்கை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலாகும்.
அதுவும் அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்வதே நல்லது. அப்படியானால் அனுபவமுள்ள, முதிர்ச்சியுள்ள, நாட்டை மீட்டெடுத்த தலைவரே உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். அந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை நான் கூறிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை.
வரிசை யுகத்தில் நின்று வலி சுமந்த நாட்களை நாம் மறந்துவிடக்கூடாது. இன்று இயல்புநிலை உள்ளதெனில் அதற்கு ஜனாதிபதியே காரணம்.
எதிரணி வேட்பாளர்கள் சுதந்திரமாக அரசியல் செய்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தவரும் அவரே.
நெருக்கடியான சூழ்நிலையிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, உறுமய திட்டம், அஸ்வெசும மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் பல பல விடயங்களை அவர் செய்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.
எனவே, தற்போதுள்ள இந்த சூழ்நிலையை மாற்றியமைத்தால் நாட்டின் பொருளதாரம் மீண்டும் படுகுழிக்குள் விழும். வரிசை யுகம் ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டும். எனவே, உங்கள் வாக்கை சரிவர பயன்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.