இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.
உலகிற்கு ஓர் அருட்கொடையாக முஹம்மது நபிகள் நாயகம் அனுப்பப்பட்டார்.
40 வயதில் நபித்துவத்தைப் பெற்றுக்கொண்ட அவர் 23 வருடகாலம் இறை அழைப்புப் பணியில் ஈடுபட்டார்.
மக்களுக்கு வாழ்க்கையின் உண்மைத் தன்மையைப் புரிய வைத்து மனிதனைப் பூரண மனிதனாக்கும் பணியில் ஈடுபட்ட நபிகள் நாயகம் பல சொல்லொணா இன்னல்களையும் சந்தித்துள்ளார்.
அவரின் போதனைகள் உலக வாழ் மக்கள் அனைவரையும் சார்ந்ததாக அமைந்துள்ளது.
சமாதானம், அமைதி, ஒற்றுமை மற்றும் சுகவாழ்வு உட்பட மனித வாழ்வுக்கான சகல துறைகளிலும் அவர் வழிகாட்டியாத் திகழ்ந்துள்ளார்.
நபிகள் நாயகம் தனது 63 ஆவது வயதில் மதினாவில் மறைந்தார்.
முஹம்மது நபியின் பிறந்த தினமான மீலாத் தினத்தில் உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, நபிகள் நாயகத்தினுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் அவர், எடுத்துக் காட்டிய விழுமியங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனைத்து வகையான அடிப்படை வாதத்தையும் முறியடித்துச் சிறந்த, உலகை உருவாக்குவதற்கான உறுதியுடன் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.