Thursday, October 10, 2024
Home » உத்தம நபியின் இறுதிநாட்கள்

உத்தம நபியின் இறுதிநாட்கள்

by damith
September 16, 2024 3:32 pm 0 comment

நபி (ஸல்) அவர்களுக்கு ஹஜ் பிறை 12ல் அல் குர்ஆனின் ஸுரதுந் நஸ்ர் அருளப்பட்டது. இவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெறப் போகிறார்கள். அவர்களது மரணச் செய்தி அவர்களுக்கு வந்துவிட்டதென உணரப்பட்டது. துல்ஹஜ் மாதம் முடிந்து முஹர்ரம் மாதமும் முடிந்தது. ஸபர் மாதமும் பிறந்தது. ஹிஜ்ரி 11 ஸபர் மாத ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்றார்கள்.

அங்கு ஷஹீதானவர்களுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சித் தொழுதார்கள். இருப்பவர்களுக்கும், இறந்தோருக்கும் விடை கூறுவதுபோல் நபி (ஸல்) அவர்களின் இச்செயல் அமைந்தது.

ஒருநாள் நடுநிசியில் ஜன்னத்துல் பகீஃ மண்ணறைக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடிவிட்டு நிச்சயமாக நாமும் உங்களிடம் வந்துசேருவோம் என்ற நற்செய்தியையும் அவர்களுக்குக் கூறினார்கள்.

ஹிஜ்ரி 11 ஸபர் திங்கட்கிழமைபிறை 28 ஜனாஸா ஒன்றில் கலந்துகொள்ளபகீஃ சென்றார்கள். நல்லடக்கம் செய்துவிட்டுதிரும்பும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. உடல் உஷ்ணம் அதிகமானது. இந்நிலையிலேயே 11 நாட்கள் மக்களுக்கு தொழுகை நடாத்தினார்கள். 13 அல்லது 14 நாட்கள் கடினமான நோயில் கழித்தார்கள்.

இறுதிவாரம் நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகவே நாளை நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்? என துணைவியரிடம் விசாரிக்க தொடங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வீட்டில் தங்குவதற்கு அவர்களின் துணைவியர் அனுமதித்தனர். ஒருபுறம் பழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி), மறுபுறம் அலீ (ரழி) தாங்கலாக கால்கள் தரையில் உரசிக் கோடுபோட்ட நிலையில் அன்னை ஆயிஷா (ரழி) வீட்டுக்கு சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தலைதுணியால் கட்டப்பட்டிருந்தது. ஆயிஷா (ரழி) அவர்களின் வீட்டிலேயே தங்களது வாழ்வின் இறுதி வாரத்தை நபி (ஸல்) அவர்கள் கழித்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் ஸுரா பலக், நாஸ் மற்றும் நபி (ஸல்) அவர்களிடம் தான் கற்ற துஆக்களை ஓதி ஊதிவந்தார்கள். பரக்கத்தை நாடி நபி (ஸல்) அவர்களின் கரத்தாலேயே அவர்களைத் தடவி விட்டார்கள்.

மரணத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு புதன்கிழமை உடல் உஷ்ணம் மேலும் அதிகரித்தது. வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது பல கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து என் மீது ஊற்றுங்கள் என்கிறார்கள்.

தோழர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு பெரிய பாத்திரத்தில் அமர வைத்து நீர் ஊற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘போதும் போதும்’ என்று கூறினார்கள். அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் சூடு தணியக்கண்டார்கள். தலையில் தடித்ததுணியைக் கட்டிக் கொண்டு போர்வையை போர்த்தியவர்களாக மிம்பரில் வந்துஅமர்ந்தார்கள். அதுதான் நபி (ஸல்) அவர்களின் கடைசி சபையாகும்.

அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு மக்களை விழித்து உருக்கமான சில உபதேசங்களைச் செய்தார்கள். எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள் எனக் கூறினார்கள். மேலும் யாராவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழித்தீர்த்துக் கொள்ளட்டும் யாரையாவது கண்ணியம் குறையதிட்டி இருந்தால் இதோ நான் முன்வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும்.

பின்பு மிம்பரில் இருந்து இறங்கி ளுஹரைத் தொழ வைத்தார்கள். மரணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி மேலும் கடுமையானது. மக்களை நோக்கி வாருங்கள் எனக்கூறி மூன்று விடயங்களைச் சொன்னார்கள்.

‘ இங்கு வருகைதரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தையும் நபிவழியையும் நன்றாகபிடித்துக் கொள்ளுங்கள் உள்ளிட்ட மூன்று விடயங்களை எடுத்தியம்பினார்கள்.

தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றையதினம் (வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி (ஸல்) அவர்களே தொழ வைத்தார்கள். அன்றையதினம் மஃரிப் தொழுகையில் ‘வல்முர்ஸ லாத்து உர்பா’ என்ற சூராவை ஓதி தொழ வைத்தார்கள். (ஆதாரம்: புஹாரி) அன்றையதினம் இஷா நேரத்தில் மேலும் நோய் தீவிர நிலையை அடைந்தது.

நபி (ஸல்) அவர்களுக்கு பள்ளிக்கு வர முடியவில்லை. அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி (ஸல்) அவர்கள் நோயுடன் இருக்கும் போது அபூபக்கர் (ரழி) அவர்களை தொழ வைக்கும்படி கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

மரணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூறக் கேட்டதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,’அறிந்துகொள்ளுங்கள் உங்களில் எவரும் அல்லாஹ் மீது நல்லெண்ணம் கொணடவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.’ (ஆதாரம்: அபூதாவூத்)

இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன் அது சனி அல்லது ஞாயிறு தினம். நபி(ஸல்) அவர்களின் உடல் நலனில் முன்னேற்றத்தை உணர்ந்தார்கள். இரண்டு பேரின் உதவியுடன் தங்களது அறையிலிருந்து பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) ளுஹர் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். என்னை அபூபக்கர் (ரழி) அருகில் அமர வையுங்கள் என்று கூற அவர்களைஅபூபக்கர் (ரழி) அவர்களின் இடப்பக்கத்தில் உட்கார வைத்தார்கள்.

மேலும் தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும் தங்களிடம் உள்ள ஏழு தங்கக் காசுகளையும் தருமம் செய்தார்கள். தங்களது ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். (ஆதாரம்: புஹாரி)

திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்கர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ‘பஜ்ர்’ தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணிஅணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள்.

தொழ வைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்கர் (ரழி) அவர்கள் தொழவைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலைகுலைய ஆரம்பித்தனர். நபி(ஸல்) அவர்கள் ‘உங்களது தொழுகையை முழுமைபடுத்திக் கொள்ளுங்கள்.’ என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஆதாரம்: புஹாரி)

முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் பாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் பாத்திமா (ரழி) அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே பாத்திமா (ரழி) அவர்கள் சிரித்தார்கள்.

இது பற்றி பாத்திமாவிடம் விசாரித்த போது எனக்கு ஏற்பட்டுள்ள இவ்வலியினால் நான் இறந்து விடுவேன் எனக்கூற நான் அழுதேன். அவர்களது குடும்பத்தில் நான் தான் முதலில் அவர்களை சென்றடைவேன் எனக் கூற நான் சிரித்தேன் என்கிறார்கள். (ஆதாரம்: புஹாரி)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட பாத்திமா (ரழி) அவர்கள் எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே என வேதனைப் பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் ஆறுதல் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

ஹஸன், ஹூஸைன் ஆகியோரை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

மனைவிமார்களையும் அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள். முன்பை விட வேதனை அதிகமானது.

மரணத் தருவாயில் இறுதிநேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அனைத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும், நெஞ்சுக்கும் இடையில் மரணமானார்கள்,அவரது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன்.

அவர்களுக்கு அருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக்கொண்டார்கள்.’லாஇலாக இல்லல்லாஹ் இன்னலில் மவ்தி சகராத்’என்றார்கள். (ஆதாரம்: புஹாரி)

அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள். என்னை மன்னிப்பாயாக.

என் மீது கருணை காட்டுவாயாக, உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக. (ஆதாரம்: புஹாரி) கடைசி வார்த்தையை மட்டும் மூன்றுமுறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உயர்த்திய அவரது கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஹிஜ்ரி 11 ரபிஉல் அவ்வல் 12 திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயதும் 4 நாட்கள் ஆயிருந்தன. நபி (ஸல்) அவர்களின் ஜனாஸா ‘ஹிபரா’ஆடையால் போர்த்தப்பட்டது. நபி ஸல்) அவர்களின் முகத்தில் இருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஸஹாபாக்கள் அழலானார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் இவ்வேளையில் திங்கட்கிழமை பகல் முழுவதும் முடிந்து இரவு முழுமையாக முடிந்தது. அதுவரை நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ‘ஹிபரா’ போர்வையுடன் இருந்தது.

செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையை களையாமல் அப்படியே குளிப்பாட்டினர். இப்பணியில் பல மூத்த தோழர்கள் ஈடுபட்டார்கள். உஸாமாவும், ஷுக்ரானும் நீர் உற்ற அலி (ரழி) அவர்கள் குளிப்பாட்டினார்கள். இவ்வாறு இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்ட ஸஃது இப்னு கைஸமுவுக்குச் சொந்தமான ‘கரஸ்’ என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது.

மேலும் நபி(ஸல்) அவர்களை வெள்ளை நிற யெமன் நாட்டு பருத்தி ஆடையினால் ‘கபன்’ இடப்பட்டார்கள். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களது உயிர் எங்கு பிரிகிறதோ அங்கு அடக்கம் செய்யப்படுவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள் அபூபக்கர் (ரழி) அவர்கள்.

உடனடியாக நபி (ஸல்)அவர்கள் மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கே அபூதல்ஹா (ரழி) அவர்கள் கப்ர் தோண்டினார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம் கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று ஜனாஸா தொழுதார்கள். இதேநிலையில் செவ்வாய் கழித்து புதன் இரவு நடுநிசியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.(ஆதாரம்: முஸ்னத் அஹ்மது)

மௌலவி எம்.யூ.எம்.வாலிஹ்... (அல்அஸ்ஹரி) வெலிகம

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x