ஜனாதிபதி தேர்தல் களம் உச்சளவில் சூடுபிடித்துள்ளது. நாளை மறுதினம் 18 திகதி இரவு நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு பெறவும் உள்ளன.
இந்நிலையில் இத்தேர்தல் பிரசார களத்தைப் பொதுவாக எடுத்து நோக்கினால் முன்னொரு போதும் இல்லாத வகையில் இம்முறை பொருளாதாரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இத்தேர்தலின் பிரதான அபேட்சகர்களாக விளங்குபவர்களின் பிரசார மேடைகளிலும் கூட்டங்களிலும் இதனைப் பரவலாக அவதானிக்க முடிகிறது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்டுள்ள பொருளாதார மேம்பாட்டு உடன்படிக்கை குறித்தும் அதிகம் கலந்துரையாடப்படுகின்றன. கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்நிலைமை முதற்தடவையாகவே ஏற்பட்டிருக்கிறது.
2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. வங்குரோத்து நிலையை அடைந்தது. அந்த நெருக்கடியினால் நாடும் மக்களும் கடும் பாதிபபுக்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்தார்கள். அதனால் அன்றைய அரசாங்கமும் ஆட்சியாளர்களும் செய்வதறியாது பதவிகளை விட்டு வெளியேறினர்.
அந்த இக்கட்டான சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றார். அத்தோடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொருளாதார வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அதன் பிரதிபலன்களை நாடும் மக்களும் அடைந்து கொள்ளத் தொடங்கினர். இதன் விளைவாக பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக நாட்டில் ஏற்பட்டிருந்த பாதிப்புக்களும் தாக்கங்களும் கட்டம் கட்டமாக அகலத் தொடங்கின. நாடு அடைந்து கொள்ளும் பொருளாதார பிரதிபலன்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவும் செய்கின்றன.
என்றாலும் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி மீண்டும் ஏற்படாத வகையில் அதனை உறுதியுடன் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் பரவலாக உணரப்பட்டிருநததது. அந்தப் பின்புலத்தில் பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆரதவும் ஒத்துழைப்பும் நல்கி வருகிறது. இது ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு பக்கபலமாகியுள்ளது.
இதன் பிரதிபலனாக பொருளாதாரம் கட்டம் கட்டாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது. ஐ.எம்.எப். உடனான பொருளாதார வேலைத்திட்டத்தின் செயல்திறன் வலுவாக உள்ளது. மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் பிரதிபலன்களை நாடு அடைந்து கொண்டுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பும் அரச வருமானமும் அதிகரித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இலங்கை சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியையும் பெற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறான சூழலில் தான் நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் தேர்தல் பிரசார மேடைகளில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தங்களது திட்டங்களை முன்வைப்பதோடு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகளை திருத்தியமைப்போம், மாற்றுவோம் என்கின்றனர்.
ஆனால் சர்வதேச நாணய நிதியம் என்பது அரசியல் கட்சிகளுடன் உடன்படிக்கை செய்து உதவக்கூடிய நிறுவனமல்ல. அது நாடுகளுடன் தான் உடன்படிக்கை செய்து உதவி ஒத்துழைப்புக்களை நல்கும். அந்த உதவி, ஒத்துழைப்புக்களும் எடுத்த எடுப்பில் வழங்கப்படக்கூடியவையும் அல்ல. அதன் நிமித்தம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட வேண்டும். இணக்கப்பாடுகளும் காணப்பட வேண்டும். இதற்கென ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ செல்லலாம். அவ்வாறு தான் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்று நாட்டில் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ள ஐ.எம்.எப் பொருளாதார ரீதியில் நாடு முன்னோக்கி பயணிக்கிறது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் நாடு இன்னும் பொருளாதார ரீதியில் உறுதியான நிலையை அடையவில்லை. இந்த சூழலில் தான் ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் ஐ.எம்.எப் உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் சில அபேட்கர்கள் வெவ்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் ஐ.எம்.எப். இன் தலைமையகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக், ‘நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம். இன்னும் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் உள்ளது. எனவே, மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும் என்றுள்ளார்.
பொருளாதாரத்தை உறுதியாகக் கட்டியெழுப்புவதற்கு ஆக்கபூர்வமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு நாடு உள்ளாவதைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அனைத்து மக்களின் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.