பங்காளதேஷில் துர்கா பூஜை விழாவை யாரேனும் சேதப்படுத்த முயன்றாலோ அல்லது இந்து பண்டிகையை மக்கள் கொண்டாடுவதைத் தடுத்தாலோ ‘கடுமையான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இடைக்கால அரசின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
“பூஜை மண்டபங்களைத் தாக்கி, பக்தர்கள் பூஜையைக் கொண்டாடுவதைத் தடுக்கும் அனைத்து நபர்கள் குறித்தும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மத விவகார ஆலோசகர் காலித் ஹொசைன் டெய்லி ஸ்டாரிடம் கூறினார்.
ஶ்ரீ ஶ்ரீ கௌரங்கா பாரி கோவிலுக்குச் சென்ற போதே காலிட் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
பங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு, இந்து கோவில்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான வன்முறை எதிர்ப்புகளைத் தொடர்ந்து நாட்டிலிருந்து ஹசீனா வெளியேறியதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள இந்து கோவில்களை குறிவைக்கும் தீவிரவாதிகள் தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் வைரலாகின.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றும் புதிதாக நியமிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்கறிஞர் எம்.டி தாஜுல் இஸ்லாம் கூறினார்.
ஹசீனா நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மற்றும் அண்மையில் ஜனவரியில் மற்றொரு முறை ஆட்சிக்கு வந்தார்.
“படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஷேக் ஹசீனா உட்பட தலைமறைவான அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிராக பிடிவிராந்து பிறப்பிக்க, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நாங்கள் விண்ணப்பம் தாக்கல் செய்வோம்” என்று இஸ்லாம் குறிப்பிட்டுள்ளார்.
“குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்டு, அவை தொகுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் சரியாக வைக்கப்பட வேண்டும், அவை மிகவும் சவாலான மற்றும் மிகப்பெரிய பணிகளாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது நாட்டில் ஆட்சி செய்து வருகிறது.
ஹசீனா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பத்தில் வேலை ஒதுக்கீட்டு வரிசையில் ஒரு பொது ஆர்ப்பாட்டமாக தொடங்கியது.இருப்பினும், அது விரைவில் அவரது அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பாரிய இயக்கமாக மாறியது.