– பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத பொருட்கள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறுகின்றது.
மு. ப. 9.30 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை பரீட்சை இடம்பெறவுள்ளது.
இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற 323,879 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதோடு, நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகின்றது.
விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 7 பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலும் ஒரு பரீட்சை நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலில் மு. ப. 9.30 மணி முதல் பிற்பகல் 10.45 வரை பகுதி ii வினாத்தாள் இடம்பெறவுள்ளது.
மு. ப. 10.45 மணி முதல் பிற்பகல் 12.45 வரை பகுதி i வினாத்தாள் இடம்பெறும்.
மு.ப. 10.45 – மு.ப. 11.15 வரை இடைவேளை வழங்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த இடைவேளையின் போது மாணவர்கள் வெளியில் செல்லவோ, பெற்றோர் பாடசாலைக்குள் செல்லவோ அனுமதி வழங்கப்படாது என அவர் தெரிவித்தார்.
பரீட்சைக்கு நேர காலத்துடன் மாணவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோருக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சில மாணவர்களின் பரீட்சை நிலையங்கள் அவர்கள் கற்கும் பாடசாலையில் அல்லாமல் இருப்பதனால் உரிய ஆசிரியர்கள் அவர்களை அங்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை இடம்பெறும் காலப் பகுதியில் பரீட்சை நிலையங்களைச் சுற்றி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பரீட்சைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள்
- பேனா (கறுப்பு/ நீலம்)
- பென்சில்
- அழிப்பான்
- தண்ணீர் போத்தல்
அனுமதிக்கப்படாத பொருட்கள்
- பைல் கவர்
- கத்தரிக்கோல்