Thursday, October 10, 2024
Home » போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் முயற்சி!

போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் முயற்சி!

by gayan
September 14, 2024 6:00 am 0 comment

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் விரைந்தோடி வந்துவிட்டது. அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன.

தேர்தல் களத்தில் இறுதிக்கட்டப் பரபரப்பு தற்போது நிலவிக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மாத்திரமன்றி, அவர்களது கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் தேர்தல் பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தரப்பில் இருந்தும் அனல் பறக்கும் கோஷங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வேட்பாளர்களில் சிலர் உண்மை பேசுகிறார்கள். தாங்கள் இதுவரை நிறைவேற்றிய காரியங்களையும், நிறைவேற்றவிருக்கின்ற காரியங்களையும் ஒளிவுமறைவின்றி அவ்வேட்பாளர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் சில வேட்பாளர்களோ உண்மைகளைத் தவிர உண்மைக்குப் புறம்பானவற்றையே அதிகம் பேசுகிறார்கள். தங்களால் எக்காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். மக்களின் வாக்குகளைக் கவர்ந்திழுப்பதற்காக அவர்கள் போலியான வாக்குறுதிகளையே மக்கள் மத்தியில் கூறுகின்றனர்.

அவர்களுக்குத் தேவை மக்களின் வாக்குகள் மாத்திரமேயாகும். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? அதற்கான சாத்தியம் உண்டா என்பதையெல்லாம் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. வாக்குகளை சுருட்டிக்ெகாள்ள வேண்டுமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். எமது நாட்டு மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்கின்ற விவேகம் அற்றவர்கள் என்று அந்த அரசியல்வாதிகள் தவறாக நினைக்கின்றார்களோ தெரியவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு எதையெல்லாமோ வழங்கப் போவவதாக அவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். அவர்களில் சிலர் வழங்குகின்ற வாக்குறுதிகள் நகைச்சுவையாகவே உள்ளன. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இல்லாத போதிலும், அவ்வாறான வாக்குறுதிகளை அவர்கள் ஏன் வழங்குகின்றார்களெனத் தெரியவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரங்கள் பெரும்பாலும் கடந்த காலம் பற்றிய பார்வையாகவே உள்ளன. இரு வருட காலத்துக்கு முன்னர் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்றிருந்த வேளையில், நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க எதிரணி அரசியல்வாதிகள் முன்வராத போது, துணிச்சலுடன் நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றவர் அவர்.

நாட்டைப் பொறுப்பேற்றது முதல் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்காக தாம் மேற்கொண்ட பெரும் முயற்சிகளை ஆதாரங்களுடன் மக்களிடம் முன்வைத்து வருகின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. தாம் ஏற்படுத்தியுள்ள திட்டங்கள் நிறைவுபெற வேண்டுமானால், மேலும் ஐந்து வருட காலப்பகுதிக்கு ஆட்சியதிகாரத்தில் இருப்பது அவசியமென்பதே ஜனாதிபதியின் கருத்து ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாத்திரமன்றி, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியுள்ள முற்போக்கான திட்டங்கள் ஏராளம். அவரது திட்டங்களின் பலனாகவே இலங்கைத் தேசம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தற்போது மீண்டெழுந்துள்ளதென்பது உண்மை. அவர் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்காவிடின் பங்களாதேஷ் நாட்டில் தற்போது நிலவுகின்ற கொந்தளிப்பான நிலைமையே இலங்கையிலும் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலவகையான வாக்குறுதிகளை மக்களுக்கு இப்போது வழங்கி வருகின்ற போதிலும், மக்கள் அவற்றையெல்லாம் பகுத்தறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் உள்ளவர்களென்பதை மறந்து விடலாகாது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஒன்றுதிரண்டுள்ள மக்களை ஆதாரமாக வைத்து வெற்றி தோல்விகளை ஒருபோதுமே முன்கூட்டிக் கணித்துவிடவும் முடியாது.

கடந்த காலத்தில் நடைபெற்ற பல தேர்தல்களை இதற்கான உதாரணங்களாகக் கொள்ள முடியும். குறித்ததொரு கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, அக்கட்சிக்குத்தான் வெற்றி கிட்டும் என்று நம்பி ஏமாந்த அனுபவங்கள் பல உள்ளன. எனவே தேர்தல் முடிவடையும் வரை எதையும் ஊர்ஜிதமாகக் கூறிவிட முடியாது.

ஜனரஞ்சகமான பேச்சுகளையும், வீராவேச வசனங்களையும் கேட்டுவிட்டுப் போவதற்காக மக்கள் கூட்டம் திரண்டு வருவதுண்டு. ஆனால் அங்கு வருகின்ற அத்தனை பேருமே அக்கட்சிக்குத்தான் வாக்களிப்பரென்பதை உறுதியாக நம்ப முடியாது. இறுதிநேர முடிவுகள் வேறுவிதமாகவும் அமைவதுண்டு.

களநிலைமை இவ்வாறிருக்ைகயில், இம்முறை தேர்தல்கால வன்முறைகள் பெருமளவு குறைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. வாக்காளர்கள் மத்தியில் இவ்வாறான பக்குவம் உருவாகியிருப்பது பாராட்டத்தக்கதாகும். இவ்வாறான அரசியல் நாகரிகம் தொடருவது விரும்பத்தக்கது. எதிர்வரும் தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென்பதே ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களின் விருப்பமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x