ஒரு முக்கியமான பிரச்சினையான தொழுநோய் குறித்து கருத்துரைக்கவுள்ளேன். இந்த நோயைப் பெரும்பாலும் குணப்படுத்த முடியுமாக இருப்பினும், இலங்கையின் சில பகுதிகளில் இன்றுவரை கவலைக்குரிய நிலைமை காணப்படுகிறது. அனைத்து இலங்கையர்களின் ஆரோக்கியத்தையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு அவசியமாகின்றது. இந்தச் சவாலை அவசரமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் சுமார் 1,550 பெரியவர்களும், 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த எச்சரிக்கை ஏற்படுத்தும் புள்ளிவிவரம், ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் தேவையை வலியுறுத்துகிறது.
தொழுநோய் மக்கள் சங்கம், தொழுநோய் எதிர்ப்புப் பிரசாரம் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகள் உள்ளிட்ட அர்ப்பணிப்புள்ள அமைப்புகளுடன் இணைந்து, தொழுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த ஒத்துழைப்பு முயற்சிகள் விழிப்புணர்வு அதிகரிப்பு. முன்கூட்டிய நோய் கண்டறிதல் மேம்பாடு, பாதிக்கப்பட்டோருக்கு உகந்த சிகிச்சையை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டது. தொழுநோயைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமும், அதன் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், சமூகநலத் திட்டங்களில் பங்கேற்பதன் மூலமும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஒவ்வொரு குடிமகனையும் நான் அழைக்கிறேன். பாதிக்கப்படுவோர், பயம் அல்லது பாகுபாடின்றி உதவியை நாடக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, இந்நோய் பற்றிய தவறான புரிதல்களையும், களங்கத்தையும் அகற்றுவதை மிகவும் முக்கியமாகக் கருதுகிறோம்.
ஒன்றுபட்டு தொழுநோயை அனுதாபத்துடனும் செயற்பாட்டுடனும் எதிர்கொள்வதற்கான நமது தீர்மானத்தை வலுப்படுத்துவோம். தனிநபர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் ஒரு நோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதவை.
இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.