ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு இன்னும் ஒரு வார காலம் உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அபேட்சகரும் பிரசார நடவடிக்கைகளை பரவலாக்கி, தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிரதான அபேட்சகர் ஒவ்வொருவரும் நாளுக்கு மூன்று நான்கென தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுக்கின்ற அதேநேரம் வீடுவீடான பிரசாரம், சிறுகூட்டங்கள், சந்திப்புக்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் என்றபடி துண்டு பிரசுரங்கள் வெளியிடல், பதாகைகளை காட்சிப்படுத்தல், போஸ்டர்கள் என்பவற்றின் ஊடாகவும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.
கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் இதே பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் நிமித்தம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. குறிப்பாக போஸ்டர்கள், துண்டு பிரசுரங்களுக்கும் பெருந்தொகை பணம் செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் தேர்தல் பிரசார போஸ்டர்களும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை பொதுக்கட்டிடங்கள், பொது இடங்கள், வீதியோர மதிகள் என எல்லா இடங்களிலும் நிறைந்து காணப்படுகின்றன.
ஆனால் தேர்தல்கள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவோ சுவரொட்டிகளையும் பதாகைகளையும் காட்சிப்படுத்தவோ முடியாது. என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் அபேட்சகர்களின் பிரசார மார்க்கங்களில் இவை முக்கிய இடத்தைப் பெற்றவையாக உள்ளன. இந்தத் தேர்தலிலும் போஸ்டர்களும் துண்டு பிரசுரங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஆனாலும் சட்டத்திற்கு முரணான இச்செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது. அதற்கு ஏற்ப பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் சட்ட விதிகளை மீறி இத் தேர்தல் பிரசாரத்தின் நிமித்தம் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் போஸ்டர்களையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளையும் அகற்றும் பணிகளுக்கென 1500 பேர் பொலிஸ் திணைக்களத்தினால் தொழிலாளர்களாக சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் நாளாந்த கொடுப்பனவு அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களைத் திரட்டி அப்புறப்படுத்தும் அளவுக்கு தேர்தல் சட்டத்திற்கு முரணாக சுவரொட்டிகளும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டும் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டும் உள்ளன.
அந்த வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ நேற்று முன்தினம் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில், ஜனாதிபதி தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்டிருந்த 04 இலட்சத்து 36 ஆயிரத்து 270 வரையான சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 904 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டும் உள்ளன. அத்தோடு 1220 கட்அவுட்கள் அகற்றப்பட்டு 1218 பதாகைகள் நீக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இவ்வளவு தொகை போஸ்டர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டுவதற்கும் பதாகைகளைக் காட்சிப்படுத்துவதற்கும் எவ்வளவு தொகை பணம் செலவிடப்பட்டிருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அவை முற்றிலும் வீண்விரயமான செலவே அன்றி வேறில்லை. ஏனெனில் இத்தேர்தல் பிரசார போஸ்டர்களும் சுவரொட்டிகளும் உடனுக்குடனும் விரைவாகவும் அப்புறப்படுத்தக்கூடியவையாகும். அதனால் இவற்றின் ஊடாக பிரதிபலன்களை அடைந்து கொள்ளவும் முடியாது.
தேர்தல் பிரசாரத்தின் நிமித்தம் போஸ்டர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டுவதும் பதாகைகளை காட்சிப்படுத்துவதும் தேர்தல் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய முரணான செயல். இதனை தேர்தல்கள் சட்ட ஏற்பாடுகள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றன. அதற்கு ஏற்ப சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் வழமை போன்று அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். இவற்றை அகற்றும் நடவடிக்கை இத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டதும் அல்ல. ஏற்கனவே ஒவ்வொரு தேர்தல் பிரசார காலத்திலும் பொலிஸாரின் ஏற்பாட்டில் இவை அகற்றப்படவே செய்கின்றன.
அதேநேரம் இத்தகைய போஸ்டர்களும் சுவரொட்டிகளும் பதாகைகளும் சுற்றாடலைப் பாதிக்கக்கூடியனவாகவும் விளங்குகின்றன. தேர்தல் காலங்களில் பொதுக்கட்டிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களின் சுவர்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இவை ஒட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட வழிவகுக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் இச்செயற்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு சூழல் நேய ஆர்வலர்களும் வலியுறுத்தவே செய்கின்றனர்.
ஆகவே தேர்தல் பிரசாரத்தின் நிமித்தமான இத்தகைய வீண்விரத்திற்கு செலவிடும் பணத்தை நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கோ அல்லது நாட்டின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கோ பயன்படுத்தலாம். அதுவே மக்களின் கருத்தாகும்.