குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலத்திரனியல் வீசா நடைமுறை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
ப்ரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க, அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய குறித்த நடைமுறையை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டி, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து, எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலத்திரனியல் வீசா நடைமுறையில் முறைகேடுகள் காணப்படுவதாகவும், அதனை இடைநிறுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரஊப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரா தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலித்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த நடைமுறையை அமுல்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் குறித்த விடயத்தை நடைமுறைப்படுத்தவில்லையென தெரிவித்து நகர்த்தல் மனு மூலம் மனுதாரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரீசீலித்த நீதிபதிகள் குழாம் இந்த மேற்படி உத்தரவை வழங்கியுள்ளது.