தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியினால் நேற்று (12) பிற்பகல் கொழும்பு 7, தேசிய நூலக ஆவணச் சேவை சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது வாள்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்விடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த மாநாட்டில் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான நுவன் வல்லந்துடாவ உரையாற்றிக்கொண்டிருக்கையில், இக்குழுவினர் பல்வேறு தகாத வார்த்தைகளால் கூச்சலிட்டு வன்முறையில் ஈடுபட்டதுடன், கைகளில் இருந்த தடிகளாலும், வாள்களாலும் ஏற்பாட்டாளர்களை தாக்கியுள்ளனர். ஜனதா விமுக்தி பெரமுன தொடர்பாக அவர் கருத்து வெளியிடும்போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அமைப்பாளர்களுக்கும் கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், “இது அமைதியான மாநாடு, இங்கு பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கருத்தை கேட்க முடியாவிட்டால், இங்கிருந்து வெளியேறுங்கள்” என தெரிவித்துள்ளனர்.
எனினும் இதனை கருத்திற்கொள்ளாது கூச்சலிட்டு தாக்கதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கு அறிவித்ததால் அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர். விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் குழுவே இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் சுதந்திரத்தை சகித்துக்கொள்ள முடியாத பயங்கரவாத மனநிலை கொண்ட அரசியல் குழுவினாலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான தாக்குதலால் அச்சுறுத்த முடியாதெனவும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நுவான் வல்லந்துடாவ குற்றஞ்சாட்டியுள்ளார்.