மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சோசலிச முற்போக்கு முன்னணி கட்சி மாணவர்களிடையே நேற்று முன்தினம் (11) இரவு இடம்பெற்ற மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இப் பல்கலைக்கழத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுக்கும் கலைப் பீடத்தைச் சேர்ந்த சோசலிச முற்போக்கு முன்னணி மாணவர்கள் குழுக்குமிடையில் நேற்று முன்தினம் (11) மாலை இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த கலை விழாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இருதரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் தற்காலிகமாக இடைநிறுத்த நேற்று (12) முதல் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிவித்துள்ளார்.
அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ள அவர்,
பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்கலைக்கழகங்களில் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகங்களிலிருந்து நேற்று(12) 06 மணி முதல் உடனடியாக வெறியேறவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் எந்தவொரு பீடத்தின் வளவுக்குள்ளும் நேற்று(12) 06 மணிக்கு பின்னர் நுழையவும், தங்குமிடங்களில் தங்கியிருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு தங்கியிருக்கும் பட்சத்தில் நாட்டிலுள்ள சிவில் சட்டவிதிகளுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உபவேந்தர் மேலும் அறிவித்துள்ளார.