தவறுதலாக கொலைக் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்து 10 ஆண்டுகள் சிறை அனுபவித்த அமெரிக்க ஆடவர் ஒருவருக்கு 50 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிக்காகோ மத்திய நடுவர் மன்றம், 34 வயது மார்செல் பிரவுனுக்கு ஆதரவாக கடந்த திங்கட்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் தவறுதலாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகையாக இது உள்ளது.
சிக்காகோவில் 2008 ஆம் ஆண்டு 19 வயது இளைஞர் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றங்காணப்பட்ட பிரவுனுக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10 ஆண்டுகள் சிறை அனுபவித்த அவர் 2018 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வழக்குத்தொடுநர் விலக்கிக்கொண்டார்.
சிக்காகோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடுவர் மன்றம் ஒன்றினால் கடந்த இரண்டு வாரங்கள் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்குப் பின்னர், பிரவுனுக்கு எதிராக பொலிஸார் ஆதாரங்களை இட்டுக்கட்டி இருப்பதும் தவறான வாக்குமூலத்தை வற்புறுத்திப் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.