பெண்கள் நம் நாட்டின் கண்கள் என பலர் சொல்லி நான் அடிக்கடி கேள்விப்பட்டதுண்டு. அப்படிப்பட்ட கண்களில் இன்று இரத்தக்கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது யாருக்கு தெரிகிறது. ஒவ்வொரு பெண்ணும் இன்று தனக்கென ஓர் இலக்கினை கொண்டு அந்த இலக்கை அடைவதற்கு தன் பாதையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் தங்கள் கனவை அடைவதற்குள் எத்தனை போராட்டங்களை அன்றாடம் சந்திக்க வேண்டி உள்ளது? ஒரு பெண் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறான நபர்களை சந்திக்க நேர்கிறது. அவ்வாறு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களில் பலர் முட்களாக இருக்கின்றனர்.அவர்களை வழியில் இருந்து அகற்றியே முன் செல்ல வேண்டியுள்ளது.
பெண்ணைவிட ஒரு சக்தி இல்லை என்று அனைவரும் கூறுவர்; உண்மைதான். ஒவ்வொரு பெண்ணின் பிரசவம் என்பது அவர்கள் மறுஜென்மம் அடைவது போன்ற வலியை தருகின்றது. இவ்வாறு பல வலிகளை பொறுத்து, ஒரு உயிரை இந்த பூமிக்கு கொண்டுவரும் பெண்கள் மனதளவில் தைரியமாக இருந்தாலும் பிரச்சினைகளின்போது செய்வதறியாது தவிக்கின்றனர்.
ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை எத்தனையோ பெண்களின் குமுறல்களை இவ்வுலகம்; கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆணுக்கு பெண் நிகரென கொள்வோம் என கூறுகின்றார்கள். ஆனால் உடலளவில் பெண்கள் மென்மையானவர்கள், இது இயற்கையின் படைப்பு. இறைவன் பெண்ணை விட ஆணை வலிமையாக படைத்தது பெண்ணுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவே மாறாக, அவர்களை பலவந்தப்படுத்த அல்ல. ஆனால் பெரும்பாலான ஆண்கள் தங்கள் பலத்தினை வைத்து இன்று பெண்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு பெண்களே தங்களை தற்காத்துக் கொள்வது அவசியமாகின்றது.
பூவும் பெண்மையும் ஒன்றென்பர். அப்படிப்பட்ட பூக்கள் இன்று ஒவ்வொரு மூலையிலும் நொடிக்கு நொடி கசக்கி எறியப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. இதனை தடுப்பதற்கு எத்தனையோ சட்டங்கள் வந்தாலும் அவை எவையும் பயனளிக்காமலே போனது. பெண்களுக்கான வன்முறை எல்லா இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றது. ஆம், ஒவ்வொரு பெண்ணும் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்று பின் வீடுதிரும்பும்வரை வரை அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். பாதையில் நடக்கும் போது பல கண்களின் தீண்டல்களிலும், பேருந்தில் பயணம் செய்யும் போது பல கைகளின் உரசல்களுக்கும், பாடசாலை செல்லும் போது தீயவர்களின் பார்வைகளுக்கும், தொழில் புரியும் இடங்களில் ஆதிக்க வர்க்கத்திடமும் பெண்கள் அடிமைப்பட்டுக் கொண்டுதானி ருக்கின்றார்கள். பெண்ணின் அனுமதியின்றி அவளிடம் அத்துமீறல், பாலியல் வன்முறை, தன் பேச்சினால் அவளைக் காயப்படுத்துதல், காமக் கண்களினால் அவளைத் தீண்டுதல் என பெண்களுக்கு எத்தனையோ கொடுமைகள் அன்றாடம் நேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
இன்று எந்தப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தாலும் எந்த சமூகவலைத்தளங்களுக்கு சென்று பார்த்தாலும் பெண்களுக்கு அன்றாடம் நடக்கும் வன்முறையை பற்றிய செய்தியே எமது கண்களுக்கு புலப்படுகிறது. இன்னும் வெளிவராமல் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை வெளியில் சொல்லவும் பெண்கள் தயங்குகின்றனர் . சமூகம் தன்னை எந்த விதத்தில் பார்க்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். இந்த சமூகம் தன் மீது குற்றம்சாட்டி விடுமோ என்று தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியில் சொல்லாமல் மறைக்கின்றனர்.
வழியில் செல்லும் ஒரு பெண்ணைப் பற்றி தவறாக கதைக்கும் போது இந்த சமுதாயம் அந்தப் பெண் அணிந்த ஆடையே முதலில் குறை சொல்கிறது. மாறாக அவளை தவறாக பார்த்தவர்களின் கண்களையும் பேசிய அவர்கள் வார்த்தைகளையும் குறை கூறுவது இரண்டாம் பட்சமாகவே அமைகிறது தன்னை ஒரு ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள தற்காப்பு கலையை தெரிந்து வைத்திருப்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமாகின்றது. தற்காப்பு கலை என்பது எமது சுய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்படும் சண்டை பயிற்சிகளையும், ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும், செயற்பாடுகளையும் கொண்டமைந்தவையாகும். அதாவது தமக்கு ஏற்படும் உடல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு எதிராக தம்மை பாதுகாக்கும் வகையில் எதிரிகளை தோற்படிப்பதாகும். ஏராளமான தற்காப்பு கலைகள் இருக்கின்றன. கராத்தே, குங்ஃபூ , மல்யுத்தம், சிலம்பாட்டம், ஜுடோ எனப் பல்வேறான தற்காப்பு கலைகள் காணப்படுகின்றன.
எவ்வாறு ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி நல்ல நிலைமைக்கு கொண்டுவரத் துடிக்கின்றார்களோ அதுபோல அவர்களின் தன்னம்பிக்கையும் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், கண்டிப்பாக தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுத்தல் இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு பெற்றோரினதும் கடமையாகின்றது. ஒவ்வொரு பாடசாலையிலும் ஆரம்பக் கல்வித் தொட்டு அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்று கண்டிப்பாக தற்காப்புகலையும் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.
தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் எனத் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திற்கும் நேரத்தினை ஒதுக்கி அவர்களுக்கு கல்வியில் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது போன்று அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலையினை பயில்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
இது பெண்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள கை கொடுக்கின்றது. அநேகமாக பல பாடசாலைகளில் இன்று தற்காப்புக் கலை கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் எல்லா மாணவர்களும் அதில் பங்கு கொள்வதில்லை.
ஆர்வமுள்ள மாணவர்களே அதனைக் கற்றுக்கொள்கின்றனர். பெண்களின் எண்ணிக்கை குறைவே.
சில வேலைகளில் இந்த கற்கைநெறிகளை கட்டண முறையில் கற்க வேண்டிய தேவையும் பாடசாலைகளில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு மாணவர்கள் இந்த தற்காப்புக் கலையை கற்க முடியாத சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர். இதனை இலவச திட்டமாக கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் தற்காப்பு கலையை கற்று, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு உறுதுணையாக அமையும்.
பாடசாலை மாணவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தற்காப்பு கலையை அறிந்து வைத்திருப்பதன் மூலம் அவர்கள் தங்களை வன்முறைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லவும் வழிவகுக்கிறது. இவ்வாறு தன்னை தவறான பார்வையுடன் எவரையும் நெருங்க விடாமல் தடுப்பதற்கு தற்காப்பு கலை ஒரு ஆயுதமாக பெண்களுக்கு பயன்படுகிறது.