Thursday, October 10, 2024
Home » சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மட்டக்களப்பு மாணவி

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மட்டக்களப்பு மாணவி

by sachintha
September 12, 2024 10:32 am 0 comment

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியில் வசித்து வரும் பொறியியலாளர் சுப்பிரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகளான (ஐந்து வயது, பத்து மாதங்கள்) மாணவி செல்வி. காவ்யஸ்ரீ சோழன் உலகசாதனைப் புத்தகத்தில் சாதனையொன்றைப் பதிவு செய்துள்ளார்.

இம்மாணவி மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்தார்.

இது தொடர்பான நிகழ்வானது மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிரீன் கார்டன் ஹோட்டலில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதன் போது தனக்கு வழங்கப்பட்டிருந்த 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கான சரியான பதிலை 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் எழுதி சோழன் உலக சாதனை படைத்தார் சிறுமி காவ்யஸ்ரீ.

இந்நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றம் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.

சோழன் உலக சாதனை படைத்த சிறுமிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் இன்பராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட துணைத்தலைவர் வரதகரன் ஆகியோர். இந்த உலக சாதனை நிகழ்வின் முதன்மை விருந்தினராக மன்முனை வடக்கு பிரதேச செயலர் வ.வாசுதேவன் பங்குகொண்ட அதேவேளை, நிகழ்வைத் தலைமேயேற்று நடத்தினார் கதிரவன் த.இன்பராசா.

மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆர்.ஜே.பிரபாகரன், இலங்கை UCMAS பணிப்பாளர் திருமதி சித்ரா இளமநாதன், UCMAS ஐச் சேர்ந்த சி.சதீஸ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புலவர் வி. ரஞ்சிதமூர்த்தி, கதிரவன் பட்டிமன்ற பேரவையின் ஆலோசகர் கவிஞர் அன்பழகன் குரூஸ், ‘உதவும் கரங்கள்’ அமைப்பின் தலைவர் சா. ஜெயராஜா, அகிலன் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் வி. ஆர். மகேந்திரன், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கனடிய நாட்டிற்கான தலைவரின் தாயார் திருமதி பேரின்பம் பார்வதி, மட்டக்களப்பு கிரானில் அமைந்துள்ள பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மோசஸ் ஜேசுதாசன், அகிலன் பவுண்டேஷன் லண்டன் அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி வி. ஆர். மகேந்திரன் ஆகியோர் பங்குபற்றினர். கதிரவன் அமைப்பின் துணைத் தலைவர் சோலையூரான் ஆர். தனுஷ்கரன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக கதிரவன் அமைப்பின் செயலாளர் கவிஞர் அழகு தனு பங்களிப்பு வழங்கினார். ஷர்மிளா சுப்பிரமணியம் நன்றியுரையாற்றினார்.

சோழன் உலக சாதனை படைத்த குழந்தை காவியஸ்ரீயை அனைவரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

செ. திருக்கோணபெருமாள்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x