இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் அடுத்த வார இறுதியில் இடம்பெற உள்ளது. இத்தேர்தலின் நிமித்தம் 39 அபேட்சகர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை தேர்தல் பிரசாரத்தில் நாட்டின் பொருளாதாரம் குறித்த விடயமும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இத்தகைய முக்கியத்துவத்தை பொருளாதாரம் கடந்த காலங்களில் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தற்போதைய தேர்தல் காலகட்டத்தில் பொருளாதாரம் குறித்து பேசப்படாத தேர்தல் மேடையே இல்லை என்றளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது ஆரோக்கியமான நிலைமை தான். ஆனால் இந்நிலைமையும், அக்கறையும் தேர்தலின் பின்னரும் தொடர வேண்டும். அது நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுக்க வேண்டும். நாட்டின் மீது உண்மையான பற்று கொண்டவர்களின் எதிர்பார்ப்பு அதுவாகவே உள்ளது.
ஏனெனில் 2022 ஆம் ஆண்டில் நாடு முகம் கொடுத்த பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக நாடும் மக்களும் எதிர்கொண்ட பாதிப்புக்களும் தாக்கங்களும் தான் இத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை தவறாகவோ, பிழையாகவோ நோக்க முடியாது. அவ்வாறான அனுபவத்தையே கடந்த பொருளாதார வீழ்ச்சி நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அதனால் தேர்தல் காலம் என்பதற்காக கலந்துரையாடிவிட்டு கடந்து செல்லக்கூடிய விவகாரம் அல்ல பொருளாதாரம். தேர்தலின் பின்னரும் அது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் முன் கொண்டு செல்லப்பட வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
பொருளாதாரம் என்பது தனிநபருக்கும், குடும்பத்துக்கும், சமூகத்திற்கும் மாத்திரமல்லாமல் முழு நாட்டுக்கும் இன்றியமையாததாகும். எந்தவொரு நாட்டினதும் பொருளாதாரம் பலமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அதன் ஊடாகவே நாடும் மக்களும் பாதிப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாவதைத் தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.
அதன் காரணத்தினால் பொருளாதாரத்தை ஒழுங்குமுறையாகவும் சீராகவும் கையாளப்பட வேண்டும். அதனை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும். அதன் நிமித்தம் முறையான திட்டமிடல்களுடனும் தூர நோக்குடனும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது தான் பொருளாதாரம் உறுதியான பாதையில் முன்னோக்கிப் பயணிக்கக்கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
அந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக நாட்டில் ஏற்பட்டிருந்த அனைத்து நெருக்கடிகளும் அசௌகரியங்களும் நீங்கிட வழிவகை செய்தன. அத்தோடு அந்த வேலைத்திட்டங்கள் பொருளாதாரத்தைத் தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்துள்ளன. அதன் பயனாக நாடு அடைந்து கொள்ளும் பொருளாதார பிரதிபலன்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போதைய தேர்தல் பிரசார காலத்தில் ஓரிரு அபேட்சகர்கள் மேடைக்கு மேடை வழங்கும் வாக்குறுதிகளும் அறிவிப்புகளும் அனைத்தையும் இலவசமாக வழங்கினால் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துவிடும். நாடு அபிவிருத்தி அடைந்துவிடும் என்ற பார்வையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவை எதுவும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தற்போது நாடு இருக்கும் நிலையில் இத்தகைய அறிவிப்புக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பது தான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். பொருளாதாரம் குறித்த தெளிவான பார்வையும் நோக்கும் கொண்ட எவரும் இவ்வாறு வாக்குறுதிகளையும் அறிவிப்புக்களையும் வழங்கவே மாட்டார்கள். மக்களின் கருத்தும் அதுதான்.
ஏனெனில் அதலபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டின் பொருளாதாரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த வேலைத்திட்டங்களின் பயனாக கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து முன்னோக்கிப் பயணிக்கிறது.
இந்த சூழலில் அனைத்தையும் இலவசமாக வழங்கும் வகையில் வழங்கப்படும் வாக்குறுதிகள் பொருளாதாரத்தைக் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கிவிடும். அதனால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாவதை எவராலும் தடுக்க முடியாது போய்விடும்.
ஆகவே மக்கள் பொறுப்புடனும் தூர நோக்குடனும் நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவது இன்றியமையாததாகும்.