ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை அமைதி வழியில் தீர்த்து வைப்பதற்கு இந்தியா பாரிய பங்களிப்பை நல்க முடியும் என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துக் கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இச்சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தத்தைத் தீர்த்து வைப்பதற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பங்கு உண்டு. இப்பிரச்சினைக்கு தனித்து நின்று உக்ரைனால் அமைதி வழி தீர்வினை எட்ட முடியாது.
சர்வதேச சட்ட விதிகள் நிராகரிக்கப்பட்டால், நெருக்கடிகளும் குழப்பங்களும் அதிகரிக்கும். இதனை எனது சீன சகாக்களிடமும் நான் எடுத்துக் கூறியுள்ளேன்’ என்றுள்ளார்.
இச்சந்திப்பின் போது தரைவழி முன்னேற்றங்கள், குளிர்காலத்திற்கு முன்னர் உக்ரைனின் அவசரத் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, ஜி 7 நாடுகள் அமைப்பின் தலைமை வகிக்கும் இத்தாலியின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், ஜி 7 நாடுகள் அமைப்பின் தலைமைத்துவ நிகழ்ச்சி நிரலில் உக்ரைனுக்கான ஆதரவுக்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதையும் உக்ரைனின் சட்டபூர்வப் பாதுகாப்பு மற்றும் நியாயமானதும் நீடித்ததுமான அமைதிக்கான தற்போதைய உறுதிப்பாட்டையும் இத்தாலி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.