Gen Z தலைமுறையினரை சமூகத்திற்குள் கொண்டு வந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு குழுவாக அவர்களை உருவாக்குவதே தனது நோக்கமாகும் என்றும், அப்போது இலங்கை இளைஞர்கள் தாங்கள் விரும்பும் சமூகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உலகின் ஏனைய நாடுகளைப் போன்று நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான வழியை தாம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
உலகில் வளர்ந்த நாடுகளை விட முன்னணியில் இருந்த எமது நாடு பொய்யான கோசங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட சம்பிரதாய அரசியலால் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் (09) மாலை நடைபெற்ற #AskRanil இளைஞர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, 2025ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை எனவும் அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இளையோருக்கு ஜனாதிபதியிடம் நேரடியாகவும் சூம் தொழில் நுட்பத்தின் ஊடாகவும் கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோடு, தமிழிலும் அவரிடம் கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் பின்வருமாறு:
கேள்வி: உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் தேரவாதப் பொருளாதாரத்தைக் குறிப்பிடுகிறது. தேரவாத பொருளாதாரம் என்றால் என்ன?
பதில்: இது தேர்தல் விஞ்ஞாபனமல்ல. இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படக் கூடிய ஒரு திட்டமாகும். வணிகப் பொருளாதாரத்தைத்தான் தேரவாதப் பொருளாதாரம் என அழைக்கிறோம். புத்தபெருமானின் கோட்பாடு ஒரு வெளிப்படையான கோட்பாடு. இது வர்த்தகம் தொடர்பானது. முன்னர் வர்த்தக நிறுவனங்களுக்கு எந்தக் கோட்பாடும் இருக்கவில்லை. அவர்கள் பழைய சாதி முறைப்படி வணிகம் செய்தனர். புத்தபெருமானின் உபதேசத்தால் உலகம் முழுவதும் வர்த்தகம் வளர்ந்தது. வர்த்தகத்துடன் தொடர்புடைய இரண்டு மதங்கள் உள்ளன. அதில் ஒன்று பௌத்தம். மற்றொன்று இஸ்லாம்.
தாய்லாந்து திறந்த பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டது. நம்மை விட முன்னேறியது. இலங்கை பின்னடைந்தது. இப்போது நாம் முன்னேற வேண்டும். உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டில், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 89 பில்லியன் டொலர்கள். 2050க்குள் அதை 350 முதல் 400 பில்லியன் டொலர்களாக மாற்ற முயற்சிக்கிறேன்.
கேள்வி: மலையக பகுதிகளில் சுற்றுலா, விவசாயம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டுத் திட்டத்துக்குள் இளையோரை எவ்வாறு உள்ளீர்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: GEN Z தலைமைமுறையினர் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும். சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் அவரோடு ஒன்றிணைந்து நாங்கள் பணியாற்றினோம். இளையோருக்கு எவ்வாறான சமூகம் உங்களுக்கு வேண்டும் என்பதை இளையோரே தீர்மானிக்க வேண்டும். இன்றைய சமூகத்தில் எவ்வாறு மக்கள் வாழ முடியும் என்பதை பற்றிய விடயங்களை நாம் திட்டமிடலாம். இலங்கை எந்நாளும் வறிய நாடாக இருக்க முடியாது. நாம் அரசியல் செய்யும்போது உண்மைகளை சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் கடன் வாங்கி கடன்களையும் செலுத்த முடியாமல் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறோம். புதிய சமூகத்தை நாம் உருவாக்கிய பின்னர் அதனை கொண்டு செல்வது உங்கள் பொறுப்பாகும்.
கேள்வி:அரச அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்படவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பொன்று கூறியிருக்கிறது.அதில் உண்மை இருக்கிறதா?
பதில்: சம்பள உயர்வை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. சம்பள அதிகரிப்பு கோரி கடந்த காலங்களில் வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படியே சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் பிரகாரமே சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கேள்வி: ஹம்பாந்தோட்டையில் நான்காயிரம் ஏக்கர் பரப்பில் முதலீட்டு வலயமொன்று அவசியமா?
பதில்: இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். அவற்றைக் கொண்டு வருவதற்கு முதலீட்டு வலயங்கள் பாரிய அளவில் அமைக்கப்பட வேண்டும். நாடளாவிய ரீதியில் அவற்றை அமைப்போம். விருப்பமான இடத்தில் முதலீடு செய்யலாம். ஹம்பாந்தோட்டையில் துறைமுகமும் விமான நிலையமும் இருப்பதால் அங்கு முதலீட்டு வலயத்தை அமைக்கத் தீர்மானித்தோம்.
கேள்வி: GEN Z தலைமுறைக்கு எதற்காக உங்கள் தலைமைத்தும் அவசியம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: நான் நாட்டை ஏற்றுக்கொண்ட பின்பு பொருளாதார நிலைத்தன்மை உருவாகியுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் நிலைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தவும், அதற்காக வெளிநாட்டு வருமானத்தை ஈட்டவும் வேண்டியுள்ளது. மற்றைய கட்சிகள் போன்று வரியைக் குறைப்போம் என்று சொல்வதையே நானும் விரும்புகிறேன். ஆனால் அதற்கு போதுமானதாக எமது வருமானம் எமக்கு இல்லை. மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு அதிகமாக கடன் பெறமாட்டோம் என்ற இணக்கப்பாட்டையும் ஐ.எம்.எப் உடன் எட்டியிருக்கிறோம். பணத்தை அச்சிடவும் முடியாது. நாம் செலவுகளை அதிகப்படுத்தினால். 2025 வரவு செலவு திட்டத்திற்காக எமக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளுக்கு இணங்கவே நாம் செயற்படுகிறோம். இதனை கருத்தில் கொண்டு வரவு செலவு திட்ட இடைவெளியையும் குறைத்திருக்கிறோம்.
ஜே.வி.பியின் யோசனையை பார்த்தால் செலவுகள் பெருமளவில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அதனை நிவர்த்திக்க போதுமான வருமான வழிகளை அவர்கள் கூறவில்லை. எனவே போலி வாக்குறுதிகள் வழங்கி மீண்டும் சரிவை ஏற்படுத்தக் கூடாது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளுடன் செல்லத் தவறினால் நிதி கிடைக்காமல் எமது பொருளாதாரம் சரியும். எனவே இவ்வாறான மோசமான அரசியலுக்காக இளையோரின் எதிர்காலத்தைக் காட்டிக்கொடுக்க முடியுமா?
கேள்வி: அனுரகுமார திசாநாயக்க உங்களுடன் கலந்துரையாடலுக்கு தயார் என்கிறார். அதற்கு நீங்கள் தயாரா?
பதில்: நல்லது. நான் இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளேன். அதற்கு அவர் மேடையிலேயே பதிலளிக்கலாம். அவர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவது பற்றி பேசுகிறார். சுனில் ஹந்துநெத்தி போன்றவர்கள் அதற்கு முரணாகச் செயற்படுகிறார்கள். அது குறித்து அவர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
கேள்வி: அனுர, தேவதைக் கதை சொல்பவர் , சஜித் வேடிக்கை பேசுபவர்.நீங்கள் சூட்சுமக்காரர் என்று சொல்கின்றனர். அதைப் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு யாது?
பதில்: நான் சூட்சுமக்காரனா இல்லையா என்று தெரியாது. ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் கற்றுக்கொண்டேன். என்னைப் பார்த்து இளையோர் கற்பார்கள். வாழ்க்கை என்பதே ஒரு பாடமாகும். அதைக் கற்க வேண்டும். மனிதனை உருவாக்குவதும் அழிப்பதும் அறிவுதான். அதனைப் பயன்படுத்தி கஷ்டத்திலிருந்து எப்படி தப்பலாம் என்று சிந்திக்க வேண்டும்.
கேள்வி: இளைஞர் சமுதாயத்திற்கு 100,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உங்கள் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கலைப்பிரிவு படித்த வேலையற்ற பட்டதாரிகளும் ஏராளமாக உள்ளனர். உங்கள் கொள்கை அறிக்கையில் அந்தக் குழுவிற்கு தீர்வு கொடுத்துள்ளீர்களா?
பதில்: நாம் விவசாய நவீனமயமாக்கல், தொழிற்சாலைகளை உருவாக்கல், சுற்றுலாவை மேம்படுத்தல், போன்ற விடயங்களை வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகவே ஆரம்பிக்கிறோம். எனவே, அரச வேலைவாய்ப்புகள், தனியார் துறை தொழில்கள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்க்கின்றோம். சுயதொழில் செய்வதற்கு இலகுவான முறையில் கடனுதவி வழங்கப்படுவதோடு ஓராண்டு கால கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும். தற்போது, கலைப் பிரிவின் கீழ் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்கள் உட்படதொழிலுக்குச் செல்வதற்குத் தேவையான தகுதிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். அப்போது வேலையில்லா கலைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறையும்.
எனவே, வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க இந்த 100,000 வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.