ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு அபேட்சகரும் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தல் பிரசாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காலம் நிறைவடைவதற்கு இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில், பிரசாரக்களம் கொதிநிலை அடைந்திருக்கிறது. அதனால் பிரதான பிரசாரக் கூட்டங்கள் மாத்திரமன்றி சிறு கூட்டங்கள், சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், மாநாடுகள், வீடுவீடாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகள் என பலவிதமான வழிகள் கையாளப்படுகின்றன.
இதன் விளைவாக இத்தேர்தல் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அத்தோடு தேர்தல் குறித்து வாக்காளர்கள் அதிக கவனம் செலுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறப்படுவது அதிகரித்து வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.
இவ்வாறான சூழலில் தேர்தல் வன்முறைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறலாமெனக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் கவனம் செலுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தி, ‘ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாட்டில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறலாமெனக் கூறப்படுவது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எவ்விதமான வன்முறைகளும் ஏற்படாது என்பதை உறுதிபடக் குறிப்பிடுகிறேன். தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுதான் உண்மை. அமைச்சர் குறிப்பிடுவது போன்று நாட்டில் வன்முறைகள் ஏற்படக்கூடிய முன் அறிகுறிகள் தென்படுவதாக இல்லை.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் முன்னொருபோதுமில்லாத வகையில் அமைதியான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இம்முறை தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகி பல வாரங்களாகியுள்ளது. தற்போது இப்பிரசாரம் உச்சகட்ட கொதிநிலையை அடைந்திருக்கிறது. இற்றைவரையும் வன்முறைகள் அற்ற முறையில் தேர்தல் களம் காணப்படுகிறது. அதனால் தேர்தலின் பின்னர் நாட்டில் வன்முறைச் சம்பங்கள் இடம்பெறலாமெனக் கூறப்படுவதில் உண்மைகள் இருக்க முடியாது. அதுவே பரவலான கருத்தாக உள்ளது.
மேலும் இத்தேர்தலுக்கான பிரசார காலம் ஆரம்பமாகி நிறைவடையும் கட்டத்தையும் அண்மித்துள்ளது. இக்காலப்பகுதியில் இரண்டொரு வன்முறைச் சம்பவங்கள்தான் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட எல்லாத் தேர்தல் காலங்களிலும் வன்முறைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. உயிரிழப்புகளும் இரத்தம் சிந்துதல்களும் பதிவாகியுள்ளன. அந்த தேர்தல் காலங்களுடன் ஒப்பிடும் போது இத்தேர்தல் பிரசார காலம் வன்முறைகள் அற்ற முறையில் காணப்படுகிறது.
அதேவேளை இத்தேர்தலை அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் வன்முறைகள் அற்ற முறையில் நடத்தப்படுவதற்கு தேவையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவதில் வாக்காளர்கள் உறுதியாக உள்ளனர்.
கடந்த காலங்களைப் போன்று வன்முறைகள் இன்றி தேர்தல் நடத்தப்படுவதை விரும்பாத சில தீய சக்திகள்தான் வன்முறைகள் இடம்பெறலாமென தெரிவித்திருக்கலாம் என வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான வதந்திகளின் ஊடாக வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் அவர்கள் வாக்களிப்பதில் சுதந்திரமாக எடுக்கக்கூடிய முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும், அவற்றின் ஊடாக அற்ப அரசியல் இலாபம் அடைந்து கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழுவும், வாக்காளர்களும் வன்முறைகள் அற்ற முறையில் தேர்தல் நடத்தப்படுவதில் உறுதியாக உள்ளனர். அதேநேரம் தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பிருக்காது என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.
‘தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெறுமாயின் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார்.
ஆகவே தேர்தல் வன்முறைகள் குறித்து வாக்காளர்கள் அச்சம் கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது. அதனால் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதே காலத்தின் அவசியத் தேவையாகும்.