அமானா வங்கி தனது புதிய சுய வங்கிச் சேவை நிலையத்தை காத்தான்குடி கடற்கரை வீதிக்கு விஸ்தரித்திருந்தது. அதனூடாக அப்பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு எந்நேரத்திலும் பணத்தை மீளப் பெறுவது, பண வைப்புகளை மேற்கொள்வது மற்றும் காசோலை வைப்புகளை மேற்கொள்வது போன்ற வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுய வங்கி நிலையத்தின் அங்குரார்ப்பணத்துடன், அமானா வங்கியின் நாடு முழுவதிலும் காணப்படும் அணுகும் பகுதிகள் 64 ஆக அதிகரித்துள்ளன. இதில் 33 முழு வசதிகளையும் கொண்ட கிளைகளாகவும், 31 சுய சேவை நிலையங்களாகவும் அமைந்துள்ளன. அல்-அக்ஸா மசூதி தொகுதி, கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி 03 எனும் பகுதியில் அமைந்துள்ள இந்த சுய வங்கி சேவை நிலையத்தினூடாக, வங்கி வசதிகள் காணப்படாத அல்லது வங்கி வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வங்கியை அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அமானா வங்கியின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய சுய வங்கிச் சேவை நிலையத்தை வங்கியின் பிரதம இடர் அதிகாரி எம். எம். எஸ். குவைலித் அங்குரார்ப்பணம் செய்ததுடன், வங்கியின் உப தலைவர் – நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் சித்தீக் அக்பர், உள்ளூர் வியாபார பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற அதிகாரிகள், பிரதேசவாசிகள் மற்றும் பிராந்தியத்தின் இதர பங்காளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விரிவாக்கம் தொடர்பில் வங்கியின் பிரதம இடர் அதிகாரி எம். எம். எஸ். குவைலித் கருத்துத் தெரிவிக்கையில், “காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு, மற்றுமொரு பகுதியில் எமது பிரசன்னத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
பல வருட காலமாக இப்பகுதியில் எமது உறுதியான பிரசன்னத்தை பேணி வருகின்றோம். எம்மீது காத்தான்குடி பிரதேசவாசிகள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன், இந்த புதிய நிலையத்தினூடாக, வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது.
ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.