Home » விவாதத்திற்கு அழைக்கும் முன் என் கேள்விக்கு பதிலளிக்கவும்

விவாதத்திற்கு அழைக்கும் முன் என் கேள்விக்கு பதிலளிக்கவும்

- முதலில் அநுர, ஹந்துன்நெத்தி, ஹர்ஷன கூடி விவாதித்து பொருளாதாரக் கொள்கையை தெரிவிக்க வேண்டும்

by Rizwan Segu Mohideen
September 11, 2024 1:14 pm 0 comment

பின்னர், அநுர, நான், IMF முகாமைத்துவ பணிப்பாளருடன் வீடியோ கலந்துரையாடலுக்கு நேரம்  ஒதுக்க முடியும்
ஏனையோர் பேச சஜித் இடம் கொடுக்காவிட்டாலும் அவரையும் அழைக்கலாம்
– குருணாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பில்    ஜனாதிபதி தெரிவிப்பு.

திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர திஸாநாயக்க தன்னை விவாதத்திற்கு அழைக்கிறார். தன்னுடன் விவாதத்திற்கு வர முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர்  தனியாக விவாதம் நடத்தி நாட்டுக்குத் தமது சரியான பொருளாதாரக் கொள்கையைச் கூற வேண்டும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தான்  முன்னர் குறிப்பிட்டதுபோல், அநுரவும், தானும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பங்கேற்கும் காணொளி உரையாடலுக்கு நேரத்தை ஒதுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, யாருக்கும் பேச இடமளிக்காமல் பேசக்கூடிய சஜித்தையும் இதற்கு அழைக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

குருணாகல் அஸ்லியா கோல்டன் கிரசென்டா ஹோட்டலில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற குருணாகல் மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், 8,900 பில்லியன் ரூபாய் செலவும், 4,900 பில்லியன் ரூபாய் வருமானமும், 4,000 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையும் கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் கொள்கைப் பிரகடனத்தை அனுரகுமார திஸாநாயக்க ஏன் தனது விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, மேடைகளில் பொய்யாகக் கூச்சல் எழுப்பாமல் தமது சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்  கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“குருணாகல் மாவட்டத்துடன் எனக்கு நீண்டகாலப் பிணைப்பு இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு கம்பஹாவில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தியை குருணாகல் வரை கொண்டு வருகின்றோம். அந்தப் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு என்ன நடந்தது என இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. சஜித்துக்கும் அநுரவுக்கும் என்ன நடந்தது என்று நான் கேட்டிருக்க வேண்டும். உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு, உரம் இன்றி மக்கள் தவிக்கும்போது சஜித்துக்கும் அநுரவுக்கும் மக்களுக்காக வருத்தமும் வேதனையும் ஏற்படவில்லையா? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லையா? அவர்கள் அப்படிச் செய்திருந்தால் இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். அவர்கள் தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாத காரணத்தினால்தான், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது.

எனக்குப் பல அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. அந்த ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தேன். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்போது சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்து தேர்தலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகார இடைவெளியை உருவாக்கியிருந்தால் இன்று வங்கதேசம் இருக்கும் நிலையில் நாமும் இருக்க வேண்டியிருக்கும்.

நாட்டின் பொறுப்பை ஏற்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தோம். அடுத்த ஆண்டு, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். நாடு முழுவதும் முதலீட்டு வலயங்களை உருவாக்குவதோடு, விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். இளையோருக்கான தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயல்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் இந்நாட்டின் செலவு 6,800 பில்லியன் ரூபாயாகவும்,  வருமானம் 5,100 பில்லியன் ரூபாயாகவும் காணப்படுவதோடு, இடைவெளி 1700 பில்லியன் ரூபாயாகக் காணப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும். எனவே, இந்த இடைவெளியை நிரப்பும் இயலுமையும் எமக்கு உள்ளது.

ஆனால்  ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாயாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாயாகவும் காணப்படும். அத்தோடு  வரிக் குறைப்பு தொடர்பிலும் பேசுகின்றனர். அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாயாக அமையும். பின்னர் பட்ஜெட் இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும். இவ்வாறான பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25% ஆக இருக்கும். இப்படியான மாற்றத்தையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?

அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாயாக உயர்வடையும். சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அண்மையில் அனுரகுமார திஸாநாயக்கவும் களனி பிரதேசத்தில் ஏற்றுமதி பொருளாதாரத்தையும் நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தார்.

ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாகவும் அவரின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இன்றி எவ்வாறு ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல முடியும்? சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களினாலேயே பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப சுதந்திரம் கிடைக்கும்.

நாம் பொருளாதாரப் பரிமாற்ற சட்டத்தைக் கொண்டுவந்தபோது, சுனில் ஹந்துன்நெத்தியும், ஹர்ஷன சூரியப்பெருமவும் ஏற்றுமதி பொருளாதாரம் இந்த நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரானது என வழக்குத் தொடுத்தனர். ஆனமடுவவில் நடைபெற்ற கூட்டத்தில் அநுர என்னை விவாதத்திற்கு அழைத்திருப்பதாக அறிந்தேன். அவர்கள் ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னெடுக்கப் போகிறார்களா அல்லது இறக்குமதியிலேயே தங்கியிருப்பார்களா என்பதை முதலில் சொல்ல வேண்டும்.

எனவே, முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருக்கு இடையில் விவாதம் நடத்தி அவர்களின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா, இறக்குமதிப் பொருளாதாரமா என்பதை முதலில் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

நான் முன்பே அழைப்பு விடுத்ததுபோல் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் நானும், அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்கும் பகிரங்க சந்திப்பொன்றை நடத்துவோம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் சஜித் பிரேமதாசவையும் அழைக்கலாம். சஜித் பேச ஆரம்பித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளருக்கு பேச நேரம் எஞ்சாது. இருப்பினும் சஜித்தையும் அழைப்போம்.

எனவே, அவரின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா இறக்குமதி பொருளாதாரமா என்பதை அநுரகுமார திசாநாயக்க எமக்கு முதலில் கூற வேண்டும். பொருளாதாரத்தை நாசமாக்கி நாட்டை வங்குரோத்து அடையச் செய்யக்கூடிய வரவு செலவு திட்ட யோசனைகளை முன்மொழிந்திருப்பது ஏன் என்று அவர்களிடம் கேட்கிறேன். அதனால் மேடைகளில் கோசமிடுவதை நிறுத்திவிட்டு சரியான பொருளாதார திட்டத்தைத் முன்மொழியுமாறு அறிவுறுத்துகிறேன்.”

ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி வழங்கிய பதில்களும் கீழே தரப்படுகின்றன.

கேள்வி: இது நாம் சிறுபராயத்தில் பார்த்த இலங்கை அல்ல. அக்காலத்தில் எழுத்தறிவு விகிதம் ஐம்பது சதவீதம் வரைதான் இருந்தது. இன்று 30 வயது வரையிலான கல்வியறிவு 100% என்றும் முழுமையான எழுத்தறிவு 92% என்றும் வானொலி தகவல் ஒன்றில் அறிந்தேன்.  

கடந்த காலத்தில் ஏற்பட்ட வங்குரோத்து நிலைக்கு அபிவிருத்தி நடவடிக்கையற்ற நிதி முகாமைத்துவம், நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதி ஒழுக்கமின்மை ஆகிய நெருக்கடிகளே  காரணமாக அமைந்தன. ஆனால் அனைவர் மீதும்  ஏன் குற்றம் சாட்டப்படுகிறது?

பதில்:

நாட்டின் ஏனைய முன்னேற்றங்களை  மறந்து விடுவோம். தம்புத்தேகமவில் ஒரு சிறிய பாடசாலை இருந்தது. மத்திய  வித்தியாலயமாக மாற்ற கட்டங்கள் வழங்கப்பட்டன. அந்தப் பாடசாலையில் அநுர திஸாநாயக்க என்ற மாணவர் ஒருவர் இருந்தார். பாடசாலைக் கல்வியின் பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தார். அதுவும் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் கட்டப்பட்ட பல்கலைக்கழகம். அங்கிருந்து வெளியேறி  நாட்டின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் கட்டப்பட்ட  பாராளுமன்றத்துக்கு வந்தார்.   76 வருடங்களாக இந்த நாட்டில்  எதுவும் நடக்கவில்லை என்று அவர் பாராளுமன்றத்தில்   கூறுகிறார்.

மேலும், தெற்காசியாவிலேயே நமது நாடு சிறந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அப்படியானால், 76 ஆண்டுகளில் ஏதோ நடந்துள்ளது. 1947 இல், இந்த நாட்டில் சுமார் 2000 பாடசாலைகள் இருந்தன. இப்போது நாடு முழுவதும் பாடசாலைகள் உள்ளன. இன்று நாடு முழுவதும் மின்சாரம் உள்ளது. அப்போது வீடுகளில் மின்சாரம் இருக்கவில்லை. குருநாகலுக்கு  சிறிய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கட்டது. அன்று ஒரே ஒரு பல்கலைக்கழகம்  மட்டுமே இருந்தது. இன்று 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இன்று எத்தனை கைத்தொழில் வலயங்கள் உள்ளன?

அப்படியானால், எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா? ஆனால் மாற்றம் தேவை என்று கூறி தமக்குத் தேவையானவர்களை அதிகாரத்திற்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இது தான் இவர்கள் எதிர்பார்க்கும் மாற்றமாகும்.  

இருக்கும் அனைவரையும் அனுப்பிவிட்டு இவர்கள் யாரை நியமிக்கப் போகிறார்கள்? பனியனில் ஓட்டைகள் உள்ளவரையா? இவர்கள் மிகப் பெரிய பொய்யை பரப்புகிறார்கள்.

கடன் வாங்கிய பணத்தை வருமானம் ஈட்ட முடியாத விடயங்களுக்கு செலவழித்ததால் தான் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதில் குறிப்பிட்ட தொகையை வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது.

கடைசியில் கடனை அடைக்கும் ஆற்றல் எங்களிடம் இல்லை. சமூக மேம்பாட்டுக்காக நாங்கள் கடன் பெற்றாலும், மீதமுள்ள கடன்கள் நிர்வாகத்திற்கும், உள்கட்டமைப்புக்கும் பயன்படுத்தப்பட்டன. அதில் எங்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. அதுதான் பிரச்சினையாக மாறியது.

கேள்வி: நீங்கள் பிரதமராக இருந்தபோது அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான பலருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதும் மாகாண மட்டத்தில் அது நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பங்களும் உள்ளது. இம்முறை ஜனாதிபதியான பின்னர் அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்:

அரசியல் பழிவாங்கல் தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நான் பிரதமராக இருந்த காலத்தில் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், கடந்த காலத்தில் வீடுகள் எரிக்கப்பட்டவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துத் தரப்பு அரசியல் தீர்வையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: கிராமங்களில் உள்ள சமூகத் தலைவர்களை  அரச நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளும்  எண்ணம் உங்களுக்கு உள்ளதா?

பதில்:

ஜனசபையை நிறுவும் பணியை  மேற்கொள்ளும் பொறுப்பு கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான செயலகமும் சட்டமும் தயாராகி வருகின்றன. எதிர்காலத்தில் அவை சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

திசைகாட்டி  காந்தம் மூலம்தான் திசையைக் கண்டறிகிறது. காந்தம் தவறாக இருந்தால், அது தவறான திசையை சுட்டிக்காட்டும். அதுதான் நடந்திருக்கிறது.

கேள்வி: ஜனாதிபதி அவர்களே, தற்போதைய கல்வி முறையில் ஏதோ சிக்கல் காணப்படுகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை வெல்வதற்கான உங்கள் கவனத்தையும் நான் அறிய விரும்புகிறேன்?

பதில்:

கல்வி முறையில் பல சிக்கல்கள் உள்ளன. பாடசாலை சபை  போன்றவற்றை நிறுவி நிர்வாகத் தரப்பின் ஊடாகத் தீர்வு காண கல்வி அமைச்சர் செயல்பட்டு வருகிறார். பாடவிதானங்களில்  கவனம் செலுத்தி, 2040 ஆம் ஆண்டுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம். இதற்கு  சுமார் 5-10 ஆண்டுகள் ஆகும்.

2050 உங்கள் எதிர்காலம் என Gen Z சந்ததியினருக்கு சொல்கிறேன். அதற்கான வழியைத் தயார் செய்வதிலேயே எனது கவனம் உள்ளது. நான் 2050 என்று சொன்னபோது ஏன் 2050 என்று ஐ.ம.ச.யினர் வினவுகின்றனர். திசைகாட்டியும்  அதே கேள்வியைக் கேட்கிறது. இது அவர்களுக்குப் புரியவில்லை. எதிர்காலத்தில் எவ்வாறான உலகம் வரப்போகிறது என்று நாம் மட்டும்தான் சிந்திக்கிறோம்.

மேலும், குருணாகல் மாவட்டத்திற்கு நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறேன். அத்துடன், தென்னைச் செய்கை அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குருணாகல் ஒரு அதிர்ஷ்டமான மாவட்டம். அந்த செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

கேள்வி: ஜனாதிபதி அவர்களே, ஜே.வி.பி இந்த நாட்டைப் பெரிதும் சேதப்படுத்திய கட்சி. ஆனால் திசைகாட்டி  என்ற இந்த கட்சியின் திடீர் அலைக்கு என்ன காரணம்?

பதில்:

பாரம்பரிய எதிர்க்கட்சி  சரியாக செயற்படாததால்தான்  திசைகாட்டி முன்னிலைக்கு  வந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சியில் உள்ள மற்றொரு கட்சியை முன்னேற அனுமதிக்கக் கூடாது.  டட்லி சேனநாயக்க முதல் ஒவ்வொரு தலைவரும் அதைத்தான் செய்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வேறு கட்சி தலைதூக்க இடமளித்தால் எதிர்க்கட்சியின் பணிகளைத் தொடர முடியாது. அவர்களுக்கு வாக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை. சிலர் அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் திசைகாட்டியை நோக்கிச் செல்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தி நேரத்தை வீணடித்து வருகிறார். அனுரவும் சஜித்தும் இரண்டாம் இடத்துக்காகப் போராடி வருகின்றனர். தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச 3 ஆவது இடத்திற்கு வீழ்ந்திருந்தார். சஜித்தால் தனது எதிர்க்கட்சித் தலைமையை பாதுகாக்க முடியாதிருக்கும்போது நாட்டை எப்படிப் பாதுகாக்க போகிறார்?

கேள்வி: நமது நாட்டில் அணுசக்தி பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் உள்ளன. அதற்கான ஆயத்தங்கள் உள்ளனவா?

பதில்:

ஆம். இயற்கை வலுசக்தியை பயன்படுத்தும்போது அணுசக்தியும் தேவைப்படலாம். இது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அணு உலை அமைந்துள்ளது. அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டியிருக்கும். 21ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களித்தால் அந்த நிலைக்கு நகரலாம்.

கேள்வி: குருணாகல், தம்பதெனிய, யாப்பஹுவ, படுவஸ்நுவர பிரதேசங்களை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளீர்களா? மேலும், உலகிலேயே சிறந்த கிரபைட்டைக் கொண்ட குருநாகலில், அது சார்ந்த தொழில்துறையை மேம்படுத்தத் தீர்மானித்துள்ளீர்களா?

பதில்:

இலங்கையில் மிகப் பெரிய கிராபைட் சுரங்கம் கஹடகஹா பகுதியிலுள்ள சுரங்கமாகும். தற்போது கிராபைட் கையிருப்பு தொடர்பிலான பிரச்சினை எழுந்துள்ளது.  நவீன அறிவியல் ஆய்வு அறிக்கை பெறப்பட உள்ளது. ராகேதர பகுதியிலும் கிராபைட் சுரங்கம் ஒன்று உள்ளது. கஹடகஹா சுரங்க கிராபைட் உலகின் சிறந்த கிராபைட் வகைகளில் ஒன்றாகும். மேலும், நாடு முழுவதும் உள்ள கனிம வளங்களைக் கண்டறியும் திட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் குருணாகல், தம்பதெனிய, யாப்பஹுவ,  படுவஸ்நுவர ஆகிய பிரதேசங்களை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்துகிறோம்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதால், இந்தப் பகுதியில் புதிய ஹோட்டல்களை அமைக்கும் திட்டமும் உள்ளது. குறிப்பாக யாப்பஹுவ உலகப் புகழ் பெற்றதையடுத்து அதன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேள்வி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 65% விவசாயத்தில் தாக்கம் செலுத்தும். மேலும் நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கான சாத்தியங்களும் உள்ளன. அது குறித்து கவனம் செலுத்தியிருக்கிறீர்களா?

பதில்:

நவீன விவசாயத்திற்கு மாறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், வன்னி ஹத்பத்து பிரதேசத்தில் சூரிய சக்திக்கான திறன் காணப்படுகிறது. ஆனால் குருணாகல் மாவட்டத்தை டிஜிட்டல் பொருளாதாரத்துடன் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகவுள்ளது. குருணாகல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் பின்னர் பாரிய டிஜிட்டல் பொருளாதார வலயமொன்று உருவாக்கப்படும்.

அதேவேளை கண்டியில் மற்றுமொரு டிஜிட்டல் பொருளாதார வலயம் உருவாக்கப்படும். இந்த இரண்டு வலயங்களும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் சீனாவுக்கு துரியான் ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் மாவத்தகமவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு பொருத்தமான பகுதிகளை அடையாளம் காண வேண்டும். குருணாகல், குளியாபிட்டிய, ஹலவத்தை ஆகிய 3 நகரங்களையும் ஒன்றிணைத்து கல்வித்துறை மேம்படுத்த வேண்டும்.

கேள்வி: இந்நாட்டின் நிலையான சம்பளம் பெறாத கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களுக்காக ஏதாவது வேலைத்திட்டம் உங்களிடம் உள்ளதா?

பதில்:

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மாதச் சம்பளம் பெறுவதில்லை. விவசாயம், மீன்பிடித்தல், சுயதொழில் போன்ற சிறுதொழில்களை செய்பவர்களே உள்ளனர். இந்த முறைசாரா தொழில் துறைக்கென தனித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியான நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. அனைவரும் அதற்குள் இணைந்துகொள்ள விரும்பாவிட்டாலும் ஓரளவானவர்கள் இணைவர்.

மேலும், இலங்கையிலும் தனியார் முதலீட்டு ஓய்வூதிய நிதி திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் இத்தகைய ஓய்வூதிய நிதியில் வாழ்கின்றனர். இப்போது இந்தியாவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, மஞ்சுலா திசாநாயக்க, குருணாகல் கல்வியல் மற்றும் வர்த்தகர்கள் கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளர் எம்.பீ.திசாநாயக்க,கலாநிதி சமிந்த மலலசேகர, பொல்கஹாவெல, ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் தம்மி ரத்நாயக்க, குருணாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் நுவன் லியனகே உள்ளிட்டோரும் பிரதேச அரசியல் தலைவர்களும், தொழில் வல்லுனர்கள் உட்பட பெருமளவானர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x