மத்திய சிரியாவில் உள்ள பல இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 16 கொல்லப்பட்டதாக சிரிய அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமா மாகாணத்தில் மஸ்யாப் நகரைச் சூழ கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் மேலும் 43 பேர் காயமடைந்ததாக சானாவை தளமாகக் கொண்ட மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிஸ்யாபுக்கு அருகில் இருக்கும் இரசாயன ஆயுத தயாரிப்புக்கான பிரதான இராணுவ ஆராய்ச்சி நிறுவனம் பல முறை தாக்கப்பட்டிருப்பதாக உளவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ஈரானிய இராணுவ நிபுணர்கள் இங்கு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலால் இரு இடங்களில் தீ பரவி இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் போராடி வருவதாகவும் சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு சில ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இடம்பெறும் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் வழக்கமாக பொது வெளியில் பதில் அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் சிரியாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த ஏப்ரலில் இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரான் தூதரகம் மீது குண்டு வீசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு 12 மாதமாக நீடிக்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.