அன்பு அனைத்தையும்விட வலிமையானது. அதன் அழகு உலகை குணப்படுத்தும் என்பதை நினைவில் கொள்வோம், ஏனென்றால் அது கடவுளில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. நாமும் அந்த அன்பை பரவச்செய்து பாதுகாப்போம் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ், பாப்புவா நியூ கினியின் வனிமோ மறைமாவட்டத்தின் விசுவாசிகளுக்கு அருளுரை வழங்கினார்.
நம்மைச் சுற்றியுள்ள கோவில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மறைபரப்புப் பணி மையங்கள் ஆகிய அனைத்தும் அனைவருக்கும் மீட்பைக் கொண்டு வருவதற்காக இயேசு கிறிஸ்து நம்மிடையே வந்தார் என்பதை சான்றுபகர்கின்றன.
உண்மையில், நமது நோக்கம் துல்லியமாக கிறிஸ்துவின் நற்செய்தியின் அழகை எல்லா இடங்களிலும் கடவுளையும் நமது சகோதரர் சகோதரிகளையும் அன்புசெய்வதன் வழியாக அறிவிப்பதாகும்.
முழு சமூகமும் இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டும், இதன் வழியாக நீங்கள் உங்கள் சேவையை அமைதியாக மேற்கொள்ள முடியும். குறிப்பாக, குடும்பப் பொறுப்புகளுடன் நற்செய்திப் பணியின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும் நிலையிலும் கூட உங்கள் பணி அமைதி நிறைந்ததாகவே இருக்கும்.
இருப்பினும், நாம் உதவக்கூடிய மற்றொரு வழியும் உள்ளது, அதுவே நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் இடத்தில் மறைப்பணியாளர்களாக வாழ்வது அதாவது, இல்லத்தில், பள்ளியில், பணியிடத்தில், இயற்கையில், கிராமங்களில், நகரங்களில் என எல்லா இடங்களிலும் மறைப்பணியாளர்களாகத் திகழ்ந்திட முடியும்.
“நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” (யோவான் 13:35; மத் 22:35-40) என்று இயேசு தனது சீடர்களிடம் கூறியதுபோன்று நமக்கும் கற்பிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வோம்.
அன்பு அனைத்தையும்விட வலிமையானது. மற்றும் அதன் அழகு உலகை குணப்படுத்தும் என்பதை நம் நினைவில் கொள்வோம். ஏனென்றால் அது கடவுளில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது.ஆகவே, நாமும் அந்த அன்பை பரவச்செய்து அதனைப் பாதுகாப்போம். அவ்வாறு செய்யும்போது கூட நம்மிடையே தவறான புரிதல்கள் மற்றும் எதிர்ப்புகள் ஏற்படலாம் என்பதையும் மனதில் நிறுத்துவோம்.
இந்த மண்ணின் மறைசாட்சியும் அருளாளருமான Peter To Rot அவர்கள், இந்த வலிமையான அன்பிற்குத் தனது வார்த்தையாலும் வாழ்வாலும் சான்று பகர்ந்தவர் ஆவார். குடும்பத்தின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த விரும்பியவர்களிடம் அதன் ஒன்றிப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தனது இன்னுயிரைக் கையளித்தார்.
பாப்புவா நியூ கினியாவில் காணப்படும் இயற்கை வளங்களுக்கு மேலாக இங்கு வரும் நல்ல மனிதர்களைச் சந்திப்பதன் வழியாக அவர்களைப் புகழ்மிக்கவர்கள் ஆக்குவதே நீங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மிக விலையுயர்ந்த பரிசு.
குழந்தைகளே, எல்லோருக்கும் பரவச்செய்யக்கூடிய உங்களின் புன்னகையாலும், பொங்கிவழியும் மகிழ்ச்சியாலும் இதனை நீங்கள் செய்திட முடியும்.இங்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் அவர்களின் இதயங்களில் வைத்திருக்கக்கூடிய மிக அழகான படம் நீங்கள்! அன்பான திருஅவையாக, உங்கள் இருத்தலைக் கொண்டு இந்த மகிழ்ச்சியான நிலத்தை தொடர்ந்து அழகுபடுத்த நான் உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன், உங்களுக்காக இறைவேண்டல் செய்கிறேன் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.
செல்வராஜ் சூசைமாணிக்கம்