டோலென்ட்டினோவின் புனிதர் நிக்கோலஸ் ஒரு ஆன்ம பலம் கொண்டவரும் இத்தாலிய புனிதரும் ஆவார். இவர், உத்தரியத்திலுள்ள ஆன்மாக்களின் பாதுகாவலர் என்றும் அறியப்படுகிறார்.
விலங்குகள், குழந்தைகள், படகோட்டிகள், கப்பல் பணியாளர்கள், நோயுற்ற மிருகங்கள், உத்தரிக்கும் ஆன்மாக்கள் ஆகியோரின் பாதுகாவலர் இவர்.
18 வயதில் துறவறம் பெற்ற நிக்கோலஸ், ஏழு வருடங்கள் கழித்தே குருத்துவம் பெற்றார். மறை போதகம் செய்வதில் கீர்த்தி பெற்றிருந்த இவர், சிறந்த ஒப்புரவாளருமாவார்.
கி.பி. 1274ல், தமது பிறந்த ஊருக்கு அருகிலுள்ள டோலேன்ட்டினோ’வுக்கு அனுப்பப்பட்டார். அங்கே இரு பிரிவினரிடையே கலவரம் நடந்து கொண்டிருந்தது. ஆயருக்கு பக்கபலமாக “கேல்ப்ஸ்” எனும் பிரிவினரும், ரோமப் பேரரசருக்கு ஆதரவாக “கிபெல்லின்ஸ்” எனும் பிரிவினரும் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர் சமாதான தூதுவராகப் பணி புரிந்தார்.
ஏழைகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் போதனை செய்தார். நோயுற்றோருக்காக புனித அன்னை கன்னி மரியாளிடம் ஜெபித்து அப்பம் வழங்கி அவர்களை குணமாக்கினார்.
அவருக்கு சம்மனசுக்களின் காட்சிகள் காணக் கிடைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. தொடர்ந்து நோன்புகள் நோற்கும் வழக்கம் கொண்ட நிக்கோலஸ், ஒருமுறை ஒரு வாரத்துக்கும் அதிகமாக நோன்பிருந்த வேளையில், அன்னை கன்னி மரியாளும், புனிதர் அகுஸ்தினாரும் காட்சியளித்து, சிலுவை அடையாளமிட்ட ரொட்டியை தண்ணீரில் நனைத்து உண்ணுமாறு கூறினர்.
நோன்புகளின் காரணமாக மிகவும் களைத்தும், பலவீனமாகவும் காணப்பட்ட நிக்கோலஸ், சிலுவை அடையாளமிட்ட ரொட்டிகளை தண்ணீரில் நனைத்து உண்டவுடன் புத்துணர்ச்சியும் புதிய பலமும் பெற்றார்.
ஏழைகளுக்கு உதவுவதிலும், சிறைச்சாலைகளுக்கு சென்று கைதிகளைக் கண்டு அவர்களுக்கு போதனைகள் செய்வதிலும் நோயுற்றோருக்காக கன்னி மரியாளிடம் ஜெபித்து ரொட்டி வழங்கி அவர்களை குணமாக்குவதிலும் வெற்றி கண்டார்.
அவருடைய இந்த வெற்றிகளுக்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்கப்பட்டபோது, தாம் இறைவனின் ஒரு கருவியே என்றார்.
தமது இறுதி நாட்களில் நோயுற்று, அதிக வேதனையுற்ற நிக்கோலஸ், கி.பி. 1305ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், பத்தாம் தேதி மரணமடைந்தார். இவரது உடல் டோலென்ட்டினோ நகரிலுள்ள “புனித நிக்கோலஸ் திருத்தலத்தில்” பாதுகாக்கப்படுகின்றது.