கிறிஸ்து இம்மையில் வாழ்ந்தபோது விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் போதித்தார்.
ஆயினும் அவருடைய போதனையை மக்கள் உணரவில்லை; உணர்ந்து மனம் மாறவுமில்லை. அவருடைய போதனை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. எனவேதான் அவர் இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி அம்மக்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:
“இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டனர்.” (மத் 13:15)
பாவங்களிலெல்லாம் கொடிய பாவம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டாலும் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்வதாகும்.
எனவேதான், நீங்கள் இன்று கடவுளுடைய குரலைக் கேட்டால் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறது பரிசுத்த வேதாகமத்தின் திருப்பாடல் 95:8. வசனம்.
கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவும் அவருடைய புகழை நாவால் அறிக்கையிடவும் கடந்த ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கின்றது.
ஞாயிறு முதல் வாசகம் மெசியாவின் காலத்தில் பார்வையற்றோர் பார்ப்பர்; காது கேளாதவர் கேட்பர் என அறிவிக்கின்றது (எசா 35:4-7). இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள்காட்டி, தாமே வரவிருக்கும் மெசியா என்பதற்குச் சான்றளித்தார் கிறிஸ்து; அதாவது, பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர் (லூக் 7:22).
ஞாயிறு நற்செய்தியில் கிறிஸ்து, காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணப்படுத்துகிறார், அவருக்குக் குணமளிக்கும் முன், அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைக்கிறார்; தம் விரல்களை அவர் காதுகளில் இடுகிறார்; உமிழ் நீரால் அவர் நாவைத் தொடுகிறார்; வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்; பெருமூச்சுவிடுகிறார். அதன் பிறகு, “திறக்கப்படு’ என்று கூறி அவரைக் கேட்கும்படியும் பேசும்படியும் செய்கிறார்.
கிறிஸ்துவின் இத்தகைய பல்வேறு செயல்கள் அருளடையாளத் தன்மை கொண்டவை. அருளடையாளங்கள் நம்பிக்கையின் அருள் அடையாளங்கள்.அருள் அடையாளங்கள் பயனளிக்க வேண்டுமென்றால் அதற்கு பலமான நம்பிக்கை தேவைப்படுகிறது.
எனவேதான் இயேசு கிறிஸ்து பல்வேறு செயல்களின் மூலம் படிப்படியாக அம் மனிதரிடத்தில் நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அவரைக் குணப்படுத்துகிறார்.
கிறிஸ்துவின் அதே வழிமுறையைத்தான் திருச்சபையும் பின்பற்றுகிறது. ஒவ்வொரு அருளடையாளத்திலும் முதலில் அருள்வாக்கு மூலமாக நமது நம்பிக்கையை வளர்த்து அதன்பிறகே அருளடையாளச் சடங்குகளை நிறைவேற்றுகிறது.
திருப்பலியிலும் அருள்வாக்கு வழிபாடு முடிந்தபின்பே நற்கருணை வழிபாடு தொடங்குகிறது.
திருமுழுக்குப் பெறுவோரின் காதையும் வாயையும் குருவானவர் தொட்டு *செவிடர் கேட்கவும் ஊமையர் பேசவும் ஆண்டவர் செய்தருளினார். நீர் விரைவில் அவரது வார்த்தையைக் காதால் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் செய்தருள்வாராக.”என்று கூறுகிறார்.
நாம் கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்கவேண்டும், ஏனெனில் கேட்பதால்தான் நம்பிக்கை உண்டாகும், “அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ, 10:17), கேள்வியால் நாம் பெற்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திப 4:20) என்று துணிவுடன் கூறிய பேதுருவின் ஆர்வம் நம்மை ஆட்கொள்ள வேண்டும்.
கடவுளின் குரலைக் கேட்பவர்கள் மற்றவர்களின், குறிப்பாக, நலிவடைந்தவர்களின் குரலைக் கேட்பார்கள்,
துன்புறுவோரின் அபயக்குரலைக் கேட்டு ஆவன செய்யவில்லை என்றால், நாம் காது இருந்தும் கேளாத செவிடர்கள்.
நமது காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறே தமது பார்வையும் நேரிய பார்வையாக இருக்க வேண்டும். பணக்காரர்களை ஒருவிதமாகவும் ஏழைகளை வேறொருவிதமாகவும் பார்த்து. ஒருதலை சார்பாக நாம் நடக்காமல் இருக்கும்படி கடந்த ஞாயிறு இரண்டாம் வாசகத்தில் நம்மை எச்சரிக்கிறார் புனித யாக்கோபு. அன்றைய நற்செய்தியில், இயேசுவின் புதுமையைக் கண்ட மக்கள் “இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்து வருகிறார்” (மாற் 7:37) என்று வியப்படைந்தனர்.
கடவுள் உலகத்தைப் படைத்தபோது தாம் படைத்ததை உற்று நோக்கினார். அவர் படைத்தவை மிகவும் நன்றாக இருந்தன (தொ.நூ 1:31). இந்த முதல் படைப்பு பாவத்தால் சீரழிந்த நிலையில் கடவுள் தம் மகன் கிறிஸ்து வழியாக மீண்டும் உலகைப் படைக்கிறார். இப்புதுப்படைப்பு முதல் படைப்பை விடச் சிறந்ததாக உள்ளது என்ற ஆழமான இறையியல் உண்மையையும் இப்புதுமை உணர்த்துகிறது.
திருமுழுக்கினால் புதுப்படைப்பாக மாறியுள்ள நாம் கடவுளுடைய வார்த்தையைக் காதால் கேட்போம். அதன் எதிரொலியாக ஏழைகளின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும் கேட்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.