Thursday, October 10, 2024
Home » வாகரையிலிருந்து காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயம் உருவாகும்

வாகரையிலிருந்து காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயம் உருவாகும்

மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Gayan Abeykoon
September 10, 2024 2:15 am 0 comment

வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (08) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். முற்போக்குத் தமிழர் கழகம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

“நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சஜித்துக்கும் அனுரவுக்கும் சரியான கொள்கை இல்லை. நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை. பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்கள் ஓடி விடுகின்றனர்.

2022 இல் நான் இந்தப் பகுதிக்கு வந்த போது நீண்ட வரிசை இருந்தது. பல பகுதிகளுக்கும் சென்றேன். நீங்கள் அனைவரும் வரிசையில் இருந்தீர்கள். இந்த வரிசையுகத்தை நிறைவு செய்ய முடிவு செய்தேன். 2023 இல் நான் வரும் போது வரிசைகள் இருக்கவில்லை. விவசாயிகள் என்னிடம் உரம் கேட்டார்கள். அதனை நான் பெற்றுக்கொடுத்தேன். நீங்கள் சிறந்த விளைச்சலைப் பெற்றுத் தந்தீர்கள். இவ்வாறுதான் நாட்டை முன்னேற்றினோம். நீங்கள் அனைவரும் கஷ்டப்பட்டீர்கள். மீண்டும் அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமா?

பிரச்சினைகள் வந்த போது மற்றைய தலைவர்கள் ஓடுகையில் நான் மட்டுமே முன்வந்தேன். இவர்களை நம்ப முடியுமா? பாராளுமன்றத்தைக் கலைகுமாறு கோரினார்கள். தேர்தலை நடத்தச் சொன்னார்கள். இவ்வாறு பல நொண்டிச்சாட்டுகளைக் கூறினார்கள். இவர்கள் கூறியதைப் போன்று 2022 இல் தேர்தலை நடத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும். பிரச்சினை தீருமா? அல்லது சிக்கல் ஏற்படுமா? பங்களாதேஷத்தைப் போன்று நாடு மாறியிருக்கும்.

சஜித் வந்து மேடைகளில் பேசுகிறார், பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். எந்தத் தீர்வும் அவரிடமில்லை. இவ்வாறானவர்களால் எவ்வாறு தீர்வு வழங்க முடியும்? அடுத்த 5 வருடங்களுக்கான ‘இயலும் ஸ்ரீலங்கா’ திட்டம் எம்மிடமுள்ளது. 5 அம்சங்களில் அதில் பிரதானமானவை.

பெண்களுக்குத் தான் அதிக பிரச்சினை ஏற்பட்டது? பெண்களின் உரிமைகள் செயற்படுத்தப்படுவதில்லை. பெண்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இந்தப் பிரதேசத்தில் விவசாய நவீன மயமாக்கலை மேற்கொண்டு நவீன விவசாயத்தில் ஈடுபவோருக்கு கடனுதவி வழங்க இருக்கிறோம். மீன்பிடித்துறையிலும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறோம். கைத்தொழில் வலயங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். திருகோணமலையில் ஒன்றை ஆரம்பிப்போம். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு கொண்டு வர இருக்கிறோம். டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை மட்டக்களப்பில் ஆரம்பிக்க இருக்கிறோம்.

இந்தப் பிரதேசத்தை சுற்றுலா வலயமாக முன்னேற்றுவோம். மட்டக்களப்பு பிரதேசத்தை உலகில் தலைசிறந்த சுற்றுலாப் பயண வலயமாக மாற்ற எம்மால் “இயலும்”.

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்:

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவை நாம் 6 மாதங்களுக்கு முன்னரே அறிவித்து விட்டோம். எமது மாவட்டத்திற்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முதற்கட்டமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதிகாரம் கொண்ட அமைச்சு பதவிகளை இந்த மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். எமது வளங்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் வறுமையை ஒழிக்க வேண்டும்”.

அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா:

”எந்த தேர்தலிலும் காணாத ஒற்றுமை எமது அணியில் உள்ளது. பல கட்சிகள் எம்முடன் ஒன்றாக உள்ளனர். மக்களும் பிரியாமல் இணைந்தே உள்ளனர். கல்குடா தொகுதி முக்கியமான தொகுதி. தேவநாயகம் போன்ற தலைசிறந்த தலைவர்கள் உருவான பகுதி இது. உங்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளிக்கும் அநுரவினாலோ சஜித்தினாலோ மக்களை ஏமாற்ற முடியாது. உண்மையைச் சொல்லும் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.அப்படிப்பட்ட தலைவருடன் அரசியல் செய்வதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்”.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்:

“அநுரவும் சஜித்தும் நாடு பற்றி எரிந்த போது பொருளார வீழ்ச்சி ஏற்பட்ட போது இருளில் மூழ்கிய போது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முன்வரவில்லை. ஜனாதிபதி ஒருவர்தான் தைரியமாக முன்வந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காக போராடிய நோயாளியைக் காப்பாற்றி சாதாரண விடுதிக்கு மாற்றினார்.

இந்த நாட்டுக்கும் அதே நிலை ஏற்பட்டது. சாதாரண வார்டில் உள்ள நோயாளியை வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்களா? மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப் போகிறீர்களா? 5 வருட காலத்திற்கு அவருக்கு அதிகாரம் வழங்கினால் நிச்சயம் நாடும் பழைய நிலைமைக்குச் செல்லும்”.

இந்த கூட்டத்தில் இந்து சமயத் தலைவர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முற்போக்குத் தமிழர் கழக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தவயோகராஜா நிரோராஜ், கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ராஜதுரை இராஜேந்திரகுமார், கட்சியின் பொருளாளர் சாமித்தம்பி யசோதரன், முற்போக்குத் தமிழர் கழக முக்கியஸ்தர்கள், பிராந்திய அரசியல் தலைவர்கள்,அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x