Thursday, October 10, 2024
Home » அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்

by Gayan Abeykoon
September 10, 2024 1:30 am 0 comment

கடந்த பல்லாண்டு காலமாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்தில் தீர்த்து வைக்கப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எனது பூரண ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளேன் என்றும் இராஜேஸ்வரன் கூறினார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்று அவரைச் சந்தித்ததாக இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

“அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. தொடர்ச்சியாக எமது மக்களை ஏமாற்றிக்கொண்டு ஒரு சில அரசியல்வாதிகள் சுயஇலாபங்களை அடைகின்றனர். எல்லா மாவட்டங்களுடனும் ஒப்பிடும் பொழுது அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்தும் பின்தங்கியே காணப்படுகின்றன. எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை அங்கு வசிக்கின்ற மக்களே நிர்வகிக்க வேண்டும். அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுக்க வேண்டும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நமது மக்களுக்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று இராஜேஸ்வரன் கூறினார்.

“இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக பேசியிருந்தேன். நான் மாகாணசபை உறுப்பினராக இருந்த போது நாவிதன்வெளி சம்மாந்துறை கல்முனை வலய தமிழ்ப் பாடசாலைகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு கல்வி வலயம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதி பல முன்னெடுப்புக்களை செய்திருந்தேன். அதனை நிவர்த்தி செய்து தரவேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்தேன். பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி , காரைதீவு பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் விபரித்திருந்தேன். அதனை ஜனாதிபதி கவனமாக செவிமடுத்தார்” என்று இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்

“ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் போது தமிழ்க் கட்சிகள் வாக்குகளைப் பிரிக்காது அனைவரும் விட்டுக்கொடுப்புடன் ஒரு சின்னத்தில் போட்டியிட்டு ஆசனங்களைப் பாதுகாக்க வேண்டும்.

நான் மாகாணசபை உறுப்பினராக இருந்த போது முடிந்தவரை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். ஆனால் ஏனயை மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான தேவைகள், பிரச்சினைகள், அபிவிருத்திகள் தற்போதுவரை தீர்வின்றியே உள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பில் பல விடயங்களை விபரித்திருந்தேன். ஜனாதிபதி சாதகமான பதிலை தந்தார்” என்று இராஜேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

வி.ரி.சகாதேவராஜா…

(காரைதீவு குறூப் நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x